FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முத்ரா திட்டத்தில் 25 லட்சம் பேருக்கு கடனுதவி

"பிரதமரின் முத்ரா வங்கி' திட்டத்தின் கீழ், 25 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

"பிரதமரின் முத்ரா வங்கி' திட்டத்தின் கீழ், 25 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

சென்னையில் முத்ரா வங்கி திட்டத்தின் கீழ், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைத்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

Advertisement

Advertisement

சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்குவதற்காக "முத்ரா வங்கி திட்டம்' இந்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டது. இதற்காக செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதன்மூலம் 25 லட்சம் பேருக்கு கடன் உதவி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள பெரிய நிறுவனங்கள் 1.25 கோடி பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கியுள்ளன. அதே நேரத்தில், நாடு முழுவதும் உள்ள சிறிய நிறுவனங்களால் 12 கோடி பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

இதுவரை நாட்டிலுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் முனைவோரை கடன் அளிப்பவர்கள் சுரண்டும் நிலை இருந்து வந்தது. தற்போது "முத்ரா வங்கித் திட்டம்' அமலுக்கு வந்துள்ளது.

ஆகையால், தங்களுக்குத் தேவையான அளவுக்கு அரசு கடனுதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தொழில் முனைவோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

"முத்ரா' திட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 20,000 கோடி நிதி வழங்கியுள்ளது. மேலும் ரூ. 3,000 கோடி, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முத்ரா வங்கி கடனுதவி குறித்த தகவல்களைத் தெரிவிக்கவும், குறைகளைத் தீர்ப்பதற்கும் இலவச தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்துமாறும், கடனுதவிக்கான விண்ணப்பப் படிவங்களை பிராந்திய மொழியில் அச்சிட்டு வழங்குமாறும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ரூ. 10 லட்சம் வரை கடன் பெறும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பிணைத் தொகை வசூலிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கிய மாதமான ஏப்ரல் முதல், 34 லட்சம் சிறு தொழில் பிரிவினர் கடனுதவி கோரி விண்ணப்பித்துள்ளனர். ரூ. 50,000 வரை கடன் பெற எந்தவிதமான நடைமுறைக் கட்டணமும் வசூலிக்கப்படாது.

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வலிமையாகத் திகழ வேண்டும் என்பது பிரதமர் மோடியின் குறிக்கோளாகும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லத் தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்களின் கடின உழைப்பும், பிரதமர் மோடி மீதுள்ள நம்பிக்கையும்தான் பிரதானக் காரணங்களாகும்.

ஏற்கெனவே, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட "ஜன்தன்', சமையல் எரிவாயு நேரடி மானியம் ஆகிய திட்டங்கள் வெற்றி பெற்றது போல, முத்ரா வங்கித் திட்டமும் வெற்றி பெற வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

வங்கி அதிகாரிகள் ஆர்ப்பாட்டம்

முத்ரா வங்கித் திட்டத்தில் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்குக்கு வெளியே, திடீரென அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுகுறித்து, அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.டி. பிராங்கோ ராஜேந்திர தேவ் கூறியதாவது:

நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகு, வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுமுறை நாளான சனிக்கிழமையன்று (செப். 26) கடன் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி, அனைத்து ஊழியர்களையும் வரவழைத்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக, புதிய ஊழியர்களை நியமிக்காததால் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு வங்கியும் குறைந்த காலத்தில் 25 பேருக்கு கடன்களை வழங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

மத்திய அரசின் "முத்ரா' திட்டத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. இது சிறப்பான திட்டமாகும். ஆனால் கடன் பெறுபவர்களின் மனுவை முறையாக பரிசீலிப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்படுவதில்லை. சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரம் பேருக்கு கடனுதவி அளிப்பதற்கான அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. கடன் பெறுபவர்களின் விண்ணப்பங்களை முறையாகப் பரிசீலிக்காமல் இவ்வளவு அவசரமாக கடன் வழங்குவதால் அவற்றை திரும்ப வசூல் செய்வதில் பிரச்னைகள் ஏற்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments