முகப்பு
தமிழ்நாடு

அரசியல்ல இது சகஜமப்பா!

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது ஒரு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு என்று அதைக் கண்டிக்காதவர்களே கிடையாது. அவரே, தான் பேசியது தவறு என்றும் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கூறிவிட்டிருக்கிறார்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியது ஒரு மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அரசியல் நாகரிகம் இல்லாத பேச்சு என்று அதைக் கண்டிக்காதவர்களே கிடையாது. அவரே, தான் பேசியது தவறு என்றும் அதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்றும் கூறிவிட்டிருக்கிறார்.

எங்கெல்லாம் முழுமையான பேச்சுரிமையுடனான மக்களாட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் அரசியல் தளத்தில் விமர்சனங்கள் எழுவதும், ஒருவரை ஒருவர் வசையாடுவதும் தவிர்க்க முடியாதவை. அரசியல்வாதிகளை நையாண்டி செய்வதும், அவர்கள் ஒருவரை ஒருவர் கிண்டலும் கேலியும் செய்வதும் அமெரிக்கக் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. அதுபோன்ற நையாண்டிகளையோ, விமர்சனங்களையோ நம்ம ஊர் ஊராட்சி உறுப்பினர்கள் கூடத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் வசைமாரி பொழிவதும், தரக்குறைவாகத் தாக்குவதும், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதும், கேலி பேசுவதும், கிண்டலடிப்பதும் ஜனநாயகம் தோன்றியது முதலே இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. புராதன கிரீஸ் நாட்டில் வாழ்ந்த நாடக ஆசிரியர் அரிஸ்டோபேன்ஸ், பிரபல அரசியல்வாதியின் இன்றியமையாத மூன்று குணங்கள் கர்ணகடூரமான குரல், துர்நாற்றம் அடிக்கும் வாய், நாகரிகமோ பண்போ இல்லாத செயல்பாடு என்று கூறுவார். அப்போதே இப்படித்தான் இருந்திருக்கிறது.

விவாதக் கலாசாரத்தை ஒரு கலையாகவே ஆக்கி வைத்திருப்பவர்கள் பிரிட்டிஷார். பாராளுமன்ற ஜனநாயகத்தில் எப்படி நாகரிகமாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க முடியும் என்பதற்கு பிரிட்டிஷாரின் எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும்.

வைகோ கூறுவதுபோன்ற விமர்சனங்கள் பலமுறை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலேயே கூறப்பட்டிருக்கிறது. ஆனால், நாகரிகமாக, நகைச்சுவை ததும்ப புத்திசாலித்தனமாகக் கூறப்படுவதால், எதிர்ப்புகளுக்குப் பதில் சிரிப்பலைகள்தான் எழுவது வழக்கம்.

18-ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஜான் வில்கஸ் என்றோர் எதிர்க்கட்சி உறுப்பினர். அவரது அனல் பறக்கும் உரையைக் கேட்ட பிறகு, ஆளும் கட்சித் தரப்பிலிருந்த சான்ட்விச் பிரபு என்பவர், ""உறுப்பினர் வில்கஸ் ஒன்று கழுவில் ஏற்றப்பட்டு இறப்பார் அல்லது தொழுநோய் பிடித்துச் சாவார்'' என்று கோபமாகப் பேசினார். வில்கஸ் சற்றும் பதறவில்லை. அவரது பதில் என்ன தெரியுமா? ""சான்ட்விச் பிரபு அவர்களே, நான் எப்படிச் சாவேன் என்பது நான் உங்களுடைய கொள்கையை அரவணைக்கிறேனா இல்லை உங்கள் மனைவியை அரவணைக்கிறேனா என்பதைப் பொருத்தது!''

முட்டாள், கோமாளி, கழுதை, மூடன், தந்தை பெயர் தெரியாதவன். சித்த சுவாதீனமில்லாதவன் என்றெல்லாம் பிரதமர்களேகூட பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வசைபாடப் பட்டிருக்கிறார்கள்.

பெஞ்சமின் டிஸ்ரேலியும், வில்லியம் கிளாட்ஸ்டினும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் மோதும்போதெல்லாம், விவாதம் அனல் பறக்கும். முடிவில் பாராளுமன்றமே சிரிப்பில் மூழ்கும். அப்படி ஒரு சம்பவம்.

ஒருமுறை துரதிர்ஷ்டத்திற்கும் பேரிடருக்கும் இடையேயான வேறுபாடு என்ன என்று கேள்வி எழுந்தபோது, பெஞ்சமின் டிஸ்ரேலி சொன்னார் -

""கிளாட்ஸ்டின் தேம்ஸ் நதியில் விழுந்து விட்டார் என்றால் அது துரதிர்ஷ்டம் (ஙண்ள்ச்ர்ழ்ற்ன்ய்ங்). அவரை யாராவது காப்பாற்றி விட்டார்கள் என்றால் அதுதான் பேரிடர் (இஹப்ஹம்ண்ற்ஹ்))''

பிரிட்டிஷ் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது, எதிர்க்கட்சி வரிசையில் அஸ்டர் அம்மையார் என்பவர் முக்கியமான உறுப்பினர். பிரதமர் சர்ச்சிலின் உரையின் மீது பேசும்போது அந்த அம்மையார் கோபமாகக் கூறினார் - ""நான் மட்டும் உங்கள் மனைவியாக இருந்திருந்தால் உங்கள் காபியில் விஷம் கலந்து கொடுத்திருப்பேன்''.

பிரதமரைப் பார்த்து அந்த அம்மையார் இப்படிச் சொன்னதும் அவையே ஒரு வினாடி ஸ்தம்பித்தது. சிலர் முகம் சுளித்தார்கள். பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிரித்தபடியே எழுந்து, குனிந்து வணங்கிவிட்டு, சொன்னார், ""அப்படி நான் உங்கள் கணவராக இருக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தால், நான் அந்தக் காபியைக் குடித்திருப்பேன்!'' அவையே அதிர்ந்தது. இறுக்கம் தளர்ந்தது.

இப்படி எத்தனை எத்தனையோ சம்பவங்களை பிரிட்டிஷ் பாராளுமன்ற சரித்திரத்திலிருந்து கூற முடியும்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு தவறாமல் அவைக்கு வருவார். விவாதங்களை ஊன்றிக் கேட்பார். ஆனால், நகைச்சுவை உணர்வுடன் பதிலளிப்பது, இடைமறித்து விமர்சனத்துக்கு விளக்கம் கூறுவது என்பதெல்லாம் கிடையாது. இந்திய நாடாளுமன்றத்தில் நகைச்சுவை உணர்வுடன் இருந்த பிரதமர் இந்திரா காந்திதான் எனலாம்.

அவசரநிலைச் சட்டம் பிறப்பித்த பிறகு நாடாளுமன்றம் கூடியிருந்தது. இந்திரா காந்தி சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு பரவலாகத் தொடுக்கப்பட்டு வந்த நேரம்.

சுதந்திரா கட்சி உறுப்பினரான பிலு மோடி மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர். அவை நடந்து கொண்டிருந்தபோது அவர் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாருக்கு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பை அனுப்பினார். அதைப் படித்த பிரதமர் இந்திராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அந்தக் குறிப்பு, அன்புள்ள ஐ.ஜி (ஐ.எ.), அதாவது இந்திரா காந்தி என்று தொடங்கிக் கடைசியில் இப்படிக்கு பி.எம். (ட.ங.), என்று முடிந்திருந்தது. பிலு மோடி என்பதைத்தான் பி.எம். என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

பிரதமர் இந்திராவும் சிரித்தபடியே அன்புள்ள பி.எம்-க்கு என்று தொடங்கி இப்படிக்கு ஐ.ஜி. என்று முடித்துப் பதிலளித்திருந்தார்.

இந்திரா காங்கிரஸýம், சுதந்திரா கட்சியும் அரசியல் ரீதியாக மிகக் கடுமையாக மோதிக் கொண்டிருந்த நேரத்திலும், நகைச்சுவை உணர்வு அவர்களை விட்டு விலகவில்லை. இந்திரா காந்திக்குப் பிறகு நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்தவர் என்கிற பெருமை அடல் பிகாரி வாஜ்பாயிக்குத்தான் உண்டு.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.