மீண்டும் மணல் மேடானது ஸ்ரீவைகுண்டம் அணை: அரசுக்கு பல கோடிரூபாய் இழப்பு
தூர்வாரும் பணி நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் அணையின் முதல் பிரிவு, மீண்டும் மணல் மேடாக காட்சியளிப்பதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
தூர்வாரும் பணி நடைபெற்ற ஸ்ரீவைகுண்டம் அணையின் முதல் பிரிவு, மீண்டும் மணல் மேடாக காட்சியளிப்பதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
பொதுப் பணித் துறையின் முறையான பராமரிப்பு இல்லாததால் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்ந்து மணல் மேடாகியது. இதனால், 8 அடி ஆழத்தில் இருந்த அணை ஒரு அடி ஆழமாக மாறி அமலை, வேலிக்காத்தான் செடிகளின் கூடாரமாக மாறியது.
சுமார் 30 லட்சம் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க கூடிய அணை தூர்ந்து மணல் மேடாகியதால் ஆண்டுதோறும் பருவ மழைக் காலங்களில் ஆற்றில் வரும் நீர்வரத்து குறைந்து 15 முதல் 25 டி.எம்.சி. வெள்ள நீரை சுழற்சி முறையில் தேக்கி வைத்து பயன்படுத்த இயலாமல் வீணாக கடலில் சென்று கலந்து வந்தது.
அணையில் போதுமான அளவு தண்ணீரை தேக்கிவைத்து பயன்படுத்த முடியாத காரணத்தால் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கால காலமாக நடந்து வந்த மூன்று போக விவசாயம் ஒரு போகமாக மாறியது. கோடைக் காலங்களில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவானது. அணையை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அரை நூற்றாண்டு கால கோரிக்கை மத்திய அரசின் வனத் துறை தடையால், தமிழக அரசால் நிறைவேற்ற முடியாத நிலை நீடித்தது.
இந்த நிலையில், அணையை தூர்வார உத்தரவிடக் கோரி கடந்த 2015 ஆண்டு ஏப்ரல் மாதம், தற்போது திமுக மாநில இளைஞரணி துணைச் செயலராக உள்ள ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொது நல வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கின் முடிவில், அணையின் தூர்வாரும் பணிகளை தமிழக அரசு தாமதமன்றி துரிதமாக தொடங்கவேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2015 ஜூன் 30-ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் கொள்ளை நடைபெறுவதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பணி தொடங்கி ஓராண்டாகியும் இதுவரை அணையின் முதல் பிரிவில் தூர்வாரும் பணி முழுமைபெறவில்லை.
ஆனால் தூர்வாரும் பணி தொடங்கும் போது எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, அணையின் முதல் பிரிவில் தூர்வாரும் பணி முடிவுற்றதாக பொதுப்பணித் துறையினர் பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்த நிலையில் மீண்டும் அணையின் முதல் பிரிவு மணல் மேடாக காட்சி அளிக்கிறது.
தூர்வாரும் பணி என்ற பெயரில் அணையின் 3-ஆவது மற்றும் 4-ஆவது பிரிவில் அதிகளவில் மணல் அள்ளப்பட்டதால், முதல் பிரிவுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அணையிலிருந்து பாசனக் குளங்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்லும் வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்கள் வறண்டு போய் உள்ளன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அணை தூர்வாரும் பணியில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை தடுக்க, அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அணையின் முதல் பிரிவு மீண்டும் மணல் மேடாக காட்சியளிக்கிறது.
இதனால், தூர்வாரும் பணிக்காக செலவிடப்பட்ட பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாகியுள்ளது. இந்த இழப்புக்கு காரணமானவர்களை கண்டறிந்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப் பணித் துறை கண்காணிப்பு பொறியாளர் அப்துல் ஹமீது கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் அணையின் முதல் பிரிவில் திட்டமிட்டபடி தூர்வாரும் பணி முடிந்துவிட்டது. தற்போது தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் மணல் மேடாக காட்சியளிப்பது கடந்த முறை வெள்ளம் வந்த போது தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், அணையில் தேங்கியுள்ளது என்றார் அவர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு கூறியதாவது:
அணையின் முதல் பிரிவில் தூர்வாரும் பணியை தொடங்குவதை விட்டுவிட்டு, 5ஆவது பிரிவான சுமார் 6.கி.மீ. தொலைவுள்ள சுப்பிரமணியபுரத்தில் தூர்வாரும் பணி என்ற பெயரில் மணல் அள்ளும் பணி தொடங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும் பொதுப்பணித் துறையினர் மணல் திருட்டை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணியை ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழுவை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், பொதுப்பணித் துறையினர் கண்காணிப்புக் குழுவுக்கு எதிராக தடை ஆணையை பெற்றனர். தூர்வாரும் பணியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகளை பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆதாரங்களுடன் எடுத்துக் கூறியதன் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி அணையை தூர்வாரும் பணிக்கு தடைவிதித்ததுடன், இதுவரை நடைபெற்ற பணி விவரங்கள் குறித்து பொதுப்பணித் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தாமிரவருணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், முறையற்ற தூர்வாரும் பணிகளால் ஆங்காங்கே தோண்டப்பட்ட அளவுக்கு அதிகமான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி முதல் பிரிவு மணல் மேடாக காட்சியளிக்கிறது. மேலும், வடகால் தென்கால் வாய்க்காலுக்கு தண்ணீர் செல்ல முடியாததால் பாசனக் குளங்கள் வறண்டு போய் உள்ளன என்றார் அவர்.
*ஸ்ரீவைகுண்டம் அணையில் தண்ணீர் வரத்து குறைந்து மணல் மேடாக காட்சியளிக்கும் நிலையிலும் அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்கள் மூலம், தொழிற்சாலைகளுக்கு
அதிகளவில் தண்ணீர் உறிஞ்சி எடுத்து செல்லப்படுவதாகவும், இதனால், குடிநீருக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்களில்
தண்ணீரின்றி வறண்டு, மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.*