முகப்பு
தமிழ்நாடு

தினகரன் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது: ஈபிஎஸ் அணி தீர்மானம் நிறைவேற்றம்

டிடிவி தினகரன் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 10 ஆகஸ்ட் 2017, 12:32 pm IST
பகிர்:


சென்னை:  டிடிவி தினகரன் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களும், முக்கியத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், டிடிவி தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழி நடத்தி வருகிறார்கள் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கழகத்தின் முக்கிய உறுப்பினர்கள் பட்டியலில் டிடிவி தினகரன் பெயர் இல்லை. ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு கட்சிக்குள் இணைக்கப்பட்டார். தினகரனை மீண்டும் கட்சியில் இணைத்து அவரை துணைப் பொதுச் செயலராக நியமித்தது செல்லாது. 

அதுமட்டுமில்லாமல், தொடர்ந்து 5 ஆண்டுகள் கழகத்தின் அடிப்படை உறுப்பினராகப் பதவி வகிக்காததால், அவர் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என்று கழகச் சட்டம் சொல்கிறது.

இதற்கிடையே, கடந்த 4ம் தேதி அதிமுக அம்மா அணிக்கான பொறுப்பாரை நியமித்தார் டிடிவி தினகரன். ஆனால், தினகரன் அறிவித்த பொறுப்புகளை உறுப்பினர்கள் நிராகரிக்க வேண்டும் என்றும், அவரது நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக அம்மா அணியில் சசிகலா மற்றும் தினகரனின் பொறுப்புகள் குறித்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.