ரகுபதி ஆணையத்துக்கு தடையை நீக்கக் கோரிய மனு: இன்று விசாரணை
புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும்
புதிய தலைமைச் செயலகக் கட்டட முறைகேடு தொடர்பாக அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு இந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியது. இக் கட்டடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து அதிமுக அரசு உத்தரவிட்டது.
இதன்படி முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்டு அதற்குப் பதிலளிக்க நீதிபதி ரகுபதி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுபதி விசாரணை ஆணையத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் அரசு அமைத்த விசாரணை ஆணையங்களின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. தடை விதிக்கப்பட்ட பின்னரும் ரகுபதி ஆணையத்துக்கு கடந்த 3 ஆண்டுகளாக தமிழக அரசு ரூ.2.23 கோடி நிதியை ஒதுக்கியது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நீலகண்டன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியிடம், இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர் என்ற அடிப்படையில் விளக்கம் பெற வேண்டியுள்ளது. எனவே, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார்.
இதனையடுத்து நீதிபதி கூறியதாவது: பிரதான வழக்கின் மனுதாரரான திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும். அதே நேரம் தேவையின்றி இழுத்தடிக்கப்படும் இந்த வழக்கால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்க விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. எனவே, இந்த வழக்கின் இடைக்கால மனு மீது வெள்ளிக்கிழமை (ஆக.3) விசாரணை நடத்தப்படும். அரசுத் தரப்பு வாதங்களுக்குப் பின் திமுக தரப்பு வாதங்களை முடிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது சட்டப்படியான கடமையைச் செய்யும்' என நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.