1,167 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வு மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1,167 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்ற ஆன்லைன் கலந்தாய்வு மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1,167 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 4,500-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 40,000-த்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பதவி உயர்வு, பணி ஓய்வு போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் சராசரியாக 400 தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாகின்றன.
மாநிலத்தில் உள்ள காலி பணியிடங்கள் அடிப்படையிலும், ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்காக பதவி உயர்வு கலந்தாய்வு அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு குறித்து முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த 1,200-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இதைத் தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கான அரசின் திட்டங்களைச் செயல்படுத்துதல், கற்றல்- கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நிரப்பக்கோரி பல்வேறு கட்சியினர், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த ஜூலை மாத இறுதியில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடத்துக்கு பதவி உயர்வு கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதில் 1,167 உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 662 பேர் வெளி மாவட்டங்களில் பணியாற்றுவது உள்ளிட்ட காரணங்களால் பதவி உயர்வை தற்காலிகமாக தவிர்த்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி: இதற்காக, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.நடராஜன், அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு நன்றி தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.