3 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு: அமைச்சர் பாண்டியராஜன்
தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
ஸ்கார்ஃப் அமைப்பின் சார்பில், மனச்சிதைவு நோய் குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியது:
மனநோய்கள் பலவிதத்தில் உள்ளன. அவற்றில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் மனநலப் பிரச்னையே அதிகம். இந்தியாவில் மூன்று மாநிலங்களில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது தமிழகத்துக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக உள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் அதிமுகவின் நிலைப்பாடு.
இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மனநல மருத்துவர் என்ற அளவிலேயே உள்ளனர். மனநல மருத்துவர்களின் தேவை அதிகமாக உள்ளது. எனவே, மனிதவள மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
பிரிட்டனைச் சேர்ந்த வார்விக் பல்கலைக்கழகப் பேராசிரியர் மேக்ஸ் விர்ச்வுட் "நவீன காலத்தின் மனநல புனர்வாழ்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். "ஸ்கார்ஃப்' அமைப்பின் நிறுவனர் டாக்டர் சாரதாமேனன், அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.தாரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.