FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்து இயக்கத் தலைவர்களை கொல்ல சதி: சென்னை, திண்டிவனம், கோவையில் என்.ஐ.ஏ. சோதனை

இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சென்னை, திண்டிவனம், கோவையில் உள்ள, வீடுகளில் தேசிய புலனாய்வுத்துறையினர்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் சென்னை, திண்டிவனம், கோவையில் உள்ள, வீடுகளில் தேசிய புலனாய்வுத்துறையினர் (என்.ஐ.ஏ.) புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
இது குறித்த விவரம்: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சக்தி சேனா அமைப்பு நிர்வாகி அன்புமாரி உள்ளிட்ட இந்து இயக்கத் தலைவர்களை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக கோயம்புத்தூர் போலீஸாருக்கு கடந்த செப்டம்பர் மாதம் ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கோயம்புத்தூர் போலீஸார், வெரைட்டி ஹால் சாலை சந்திப்பு அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), சென்னை ஓட்டேரி தர்கா குறுக்குத் தெருவைச் சேர்ந்த ச.சலாவூதின் (24), எம்.கே.பி.நகர் புதுநகரைச் சேர்ந்த ஜாபர்சாதிக் அலி (25), பல்லாவரம் நேருநகர் பரசுராமன் தெருவைச் சேர்ந்த சி.சம்சுதீன் (25), கோயம்புத்தூர் என்.எச்.சாலை பகுதியைச் சேர்ந்த ஆசிக் (25), உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ பைசல் (26), குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்த சாகுல்அமீது (26) ஆகிய 7 பேரை பிடித்து, விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் 7 பேரும் , இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி கோவை வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 7 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கோயம்புத்தூர் போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இவ் வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வுத்துறைக்கு அண்மையில் மாற்றப்பட்டது. அதையடுத்து கோயம்புத்தூர் போலீஸார், வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர்.
சென்னையில் சோதனை: இதன் ஒரு பகுதியாக இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட, சென்னை ஓட்டேரி தர்கா குறுக்குத் தெருவைச் சேர்ந்த சலாவூதின், எம்.கே.பி.நகர் புதுநகரைச் சேர்ந்த ஜாபர்சாதிக் அலி, பல்லாவரம் நேருநகர் பரசுராமன் தெருவைச் சேர்ந்த சி.சம்சுதீன் ஆகியோர் வீடுகளில் சோதனை செய்வதற்கு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக புதன்கிழமை காலை 7.15 மணியளவில் வந்தனர்.
மூன்று பேர் வீடுகளிலும் வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இச் சோதனை காலை 10.30 மணி வரை நடைபெற்றது. இந்த சோதனையில் எம்.கே.பி.நகரில் உள்ள ஜாபர் சாதிக் அலி வீட்டில் இருந்து ஏராளமான புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதில் வழக்குத் தொடர்பாக முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால், அந்தப் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. சில இடங்களில் பாதுகாப்பு கருதி போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதேபோல திண்டிவனத்தில் உள்ள இஸ்மாயில் வீடு, கோயம்புத்தூர் என்.எச்.சாலை பகுதியில் உள்ள ஆசிக் வீடு, உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ள ஆட்டோ பைசல் வீடு, குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் சாலை பகுதியில் உள்ள சாகுல்அமீது வீடு ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இச் சோதனையில் ஆட்டோ பைசல் வீட்டில் இருந்து ரகசிய கடிதங்கள்,ஆவணங்கள், 3 செல்லிடப்பேசிகள், கத்தி, ரூ.2.16 லட்சம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 
சென்னை, திண்டிவனம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இச் சோதனை ஒரே நேரத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments