பாஜகவுக்கு உதவவே நாடாளுமன்றத்தை அதிமுக முடக்குகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
புயல் நிவாணத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் பாஜகவுக்கு உதவும் வகையில் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
புயல் நிவாணத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் பாஜகவுக்கு உதவும் வகையில் நாடாளுமன்றத்தை அதிமுக முடக்குவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கஜா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வாழ்வாதாரத்துக்கான அனைத்து உடைமைகளையும் பறிகொடுத்து கண்கலங்கி நிற்கும் காவிரி டெல்டா மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு ஒரு மாதத்துக்கு மேலாகியும் நிவாரண உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணப் பொருள்கள் வழங்கிட வேண்டும் என்று தினமும் நடக்கும் போராட்டங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை.
வயிற்றுப் பசிக்கு போராடிய மக்களையும், வாழ்வாதாரத்தை தொலைத்த மக்களையும் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகக் கைது செய்வதிலும், ஆலங்குடியில் போராட்டம் நடத்திய மக்களுக்கு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தில் மனு போடுவதிலும் அக்கறை காட்டும் அதிமுக அரசு, மத்திய அரசிடம் கஜா பேரிடர் நிதி பெறுவதற்கு அரசியல் ரீதியாக ஒரு சிறிய அழுத்தத்தைக் கூட இதுவரை கொடுக்கவில்லை.
மத்திய பாஜக அரசுக்கு உதவி செய்யும் உள்நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் அதிமுக எம்.பி.க்கள் கஜா புயல் குறித்த விவாதத்தின்போதுகூட அவையில் இருந்து பேசி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக இல்லை.
எனவே, கஜா புயல் பாதிப்பில் சிக்கி அவதிப்படும் அப்பாவி மக்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உடனடியாக நிவாரண உதவிகள், ஆங்காங்கே அனைத்துக் கட்சிக் குழுக்கள் அமைத்து அவர்கள் முன்னிலையில், வழங்கிட வேண்டும். அந்த மாவட்டங்களில் விவசாயக் கடன் மற்றும் கல்வி கடன்களை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.