ஹெச்ஐவி ரத்தம் - விஷம் குடித்த இளைஞர் மரணம் அடைந்தது எப்படி? டீன் விளக்கம்
சிவகாசியில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
சிவகாசியில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மதுரை அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை டீன் எஸ். சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியது:
இளைஞர் உட்கொண்டிருந்த எலி விஷம் மிகவும் வீரியமானது. விஷத்தை முறிக்க அனைத்து வகை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இளைஞர் ரத்த வாந்தி எடுத்தார். இதையடுத்து அவருக்கு 3 யூனிட்டுகள் ரத்தம் செலுத்தப்பட்டு மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்தது. ஆனால், விஷத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார் என்றார்.
Advertisement
Advertisement
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி நோய் தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தியதால் அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி கிருமித் தொற்றுள்ள ரத்தம் வழங்கிய ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட இளைஞர் எலிக்கு வைக்கப்படும் விஷத்தை உட்கொண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த இளைஞரின் உறவினர்கள் மருத்துவமனை முன் கூடினர். இதனால் மருத்துவமனை பிரேதப் பரிசோதனைக்கூடம் முன் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
சாவில் சந்தேகம் - இளைஞரின் பெற்றோர் புகார்
இந்நிலையில் இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இளைஞரின் தந்தை சங்கையன் அளித்துள்ள புகாரில், எனது மகனுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் கடந்த 2016-இல் மேற்கொண்ட ரத்தப் பரிசோதனையில் ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அதை தெரிவிக்க மருத்துவர்கள் தவறிவிட்டனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 30-இல் எனது மகன் தானமாக வழங்கிய ரத்தத்தை சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு செலுத்தியுள்ளனர். இதில் அந்த பெண்ணுக்கும் ஹெச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த எனது மகன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், டிசம்பர் 26ஆம் தேதி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கிருந்து உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் எனது மகன் உடல்நிலை நன்றாக இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எனது மகன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு நன்றாக இருந்த எனது மகன் காலையில் இறந்து விட்டதாக கூறப்படுவது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகன் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே எனது மகனின் பிரேதத்தை பரிசோதனை செய்ய பிற மாவட்ட அரசு மருத்துவர்கள் குழுவை நியமிக்க வேண்டும். மேலும் பிரேத பரிசோதனையை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்ய இளைஞரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.