FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மின் வாகனப் பயன்பாடு தமிழகத்துக்கு எப்போது வரும்?: திமுக - அதிமுக விவாதம்

மின் வாகனங்கள் தமிழகத்தில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.

Updated On : 8 ஜூன் 2018, 1:28 am IST
பகிர்:

மின் வாகனங்கள் தமிழகத்தில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது தொடர்பாக திமுக - அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேசியது: 
உலக அளவில் மின் வாகனங்கள் அதிகரித்துள்ளன. இதற்காக பிரத்யேகமாக மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு, மின் பேருந்துகள், மின் கார்கள் இயக்கப்படுகின்றன. பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் மின் வாகனங்களுக்கு மாற வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. தமிழக அரசு ஏன் இதில் கவனம் செலுத்தாமல் உள்ளது. மின் வாகனங்களைக் கொண்டு வருவது தொடர்பான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்றார்.
அப்போது தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குறுக்கிட்டுக் கூறியது: மின் வாகனப் பயன்பாடுகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. அது இறுதி செய்யப்பட்டு முதல்வரிடம் ஒப்புதல் பெற்று வெளியிடப்படும் என்றார். 
அதன் பின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியது: உலக அளவில் மின் வாகனப் பயன்பாடு இன்னும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மின் வாகனங்களுக்கு வேகமாக மின்னேற்ற முடியாத நிலை உள்ளது. ஒரு மின் பேருந்தின் விலை ரூ.2 கோடி அளவுக்கு உள்ளது. மின் பேட்டரி திறனை மேம்படுத்துவதுடன், பல்வேறு தொழில்நுட்பங்களையும் மேம்படுத்த வேண்டியுள்ளது. அதனால் மின் வாகனப் பயன்பாடு இன்னும் அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் 200 மின் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அரசின் உதவியையும் கேட்டுள்ளோம்.
டி.ஆர்.பி. ராஜா: அமைச்சர் புரியாமல் பேசுகிறார். மின் வாகனப் பயன்பாடு உலக அளவில் பெருகி விட்டது. பல நாடுகளில் இந்தப் பயன்பாடு உள்ளது. இந்தியாவில்தான் இன்னும் இது பயன்பாட்டுக்கு வரவில்லை.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மின் வாகனப் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் இன்னும் மேம்பாடு அடையவில்லை என்றுதான் அமைச்சர் கூறுகிறார்.
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்: அமைச்சர்களுக்குப் புரியவில்லை என்று அவ்வப்போது கூறி, உறுப்பினருக்கு மட்டுமே எல்லா விவரங்களும் தெரிந்ததுபோலப் பேசுகிறார். இது தவறு. மின் வாகனப் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் இன்னும் மேம்படவில்லை என்றுதான் கூறினோம். எங்களுக்கும் மின் வாகனம் குறித்த முழு விவரம் தெரியும்.
ஜெ.அன்பழகன் (திமுக): அமைச்சருக்கு விவரம் தெரியும் என்கிறார். மின் பேருந்துகள் எங்கெங்கு இயங்குகின்றன என்று விவரம் சொல்ல முடியுமா?
அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்: இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில்தான் முதன் முதலில் மின் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் 200 பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments