40 சதவீதம் எம்.சான்ட் பயன்பாடு: முதல்வர் பழனிசாமி பதில்
தமிழகத்தில் 40 சதவீதம் பேர் செயற்கை மணலான எம்.சான்ட்டை பயன்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் 40 சதவீதம் பேர் செயற்கை மணலான எம்.சான்ட்டை பயன்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் தொழில் மற்றும் ஊரகத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை விவாதம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் என்.கார்த்திக் (சிங்காநல்லூர்) பேசினார். அப்போது, எம்.சான்ட் மணல் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்:-
ஆற்று மணல், ஓடை மணலை கட்டுமானத்துக்குப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்பதன் அடிப்படையில் எம்.சான்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் (திமுக) ஆட்சியிலும் ஆற்று மணல் அள்ளிப் பயன்படுத்தப்பட்டது. கட்டுமானத்துக்கு ஆறுகளிலும், ஓடைகளிலும் மணல் எடுத்துப் பயன்படுத்தப்பட்டது. மணல் முக்கியமானது. கட்டுமானத் தொழிலுக்கு மணல் தேவைப்படுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தி...: எம்.சான்ட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 10 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு இப்போது வரை 40 சதவீதம் பேர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி 100 சதவீதமும் எம்.சாண்ட் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
24 நிறுவனங்களுக்கு...: தமிழகத்தில் மொத்தம் 24 எம்.சான்ட் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது. என்.சாண்ட் ஆலைகளை நிறுவுவோருக்குத் தாராளமாக உரிமம் வழங்கப்படும். விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்தால் உரிமம் அளிக்கப்படும்.
திமுக ஆட்சியில் குவாரி இருந்தது. கட்டுமானத்துக்கு மணல் அத்தியாவசியமானது. அரசின் சார்பிலும் கட்டுமானத் தொழில் நடைபெற்று வருகிறது. மணல் தேவையாக உள்ளது. கட்டடங்களுக்கும் மணல் தேவைப்படுகிறது. ஏழை மக்களுக்குப் பசுமை வீடுகள் கட்டவும், மணல் மிக மிக முக்கியம். ஆறுகளிலும், ஓடைகளிலும் இப்போது மணல் விதிகளுக்கு உட்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்யவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. ஒப்பந்தப்புள்ளிகளைப் பரிசீலனை செய்து வருகிறோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.