எட்டு வழிச் சாலைத் திட்டம்: அன்புமணியின் கருத்துக் கேட்புக்கு போலீஸார் அனுமதி மறுப்பு
தருமபுரி மாவட்டத்தில் எட்டு வழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளில் மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் எட்டு வழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளில் மக்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸின் கருத்துக் கேட்புக் கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
சேலம்- சென்னை எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தில் பொதுமக்களின் கருத்தைக் கேட்டறிந்து, அரசுக்குத் தெரிவிப்பதாகக் கூறி, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பா.ம.க. இளைஞரணிச் செயலருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கருத்துக் கேட்புக் கூட்டங்களை அறிவித்தார்.
இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டி கிராமத்திலும், அரூர் வட்டம் முத்தானூர் கிராமத்திலும் புதன்கிழமை (ஜூன் 27) பிற்பகலில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தன.
இந்தக் கூட்டங்களுக்கு அனுமதி கோரி தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு, பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் விண்ணப்பித்திருந்தார்.
அவரது மனுவுக்கு அரூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.சி. செல்லபாண்டியன் அனுமதி மறுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பா.ம.க. மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை:
மக்களவை உறுப்பினர் என்ற முறையில் பாதிக்கப்பட்டுள்ள தொகுதி மக்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த முறைப்படி உரிய முறையில் காவல் கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்திருந்தோம். கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது ஜனநாயகப் படுகொலை. மீண்டும் முறையான அனுமதி பெற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.