FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பழனி அருகே லாரி- வேன் மோதல்: 7 பேர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு லாரியும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

30 ஜனவரி 2024, 6:30 pm IST
பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பிரிவு பாலம் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு விபத்துக்குள்ளான லாரி மற்றும் வேன்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு லாரியும், வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கோரித்தோட்டை சேர்ந்தவர் சசி (62). காவலாளியாக பணியாற்றி வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை தனது மனைவி விஜியம்மா (60), பேரன்கள் அபிஜித் (17), ஆதித்யன் (12), அதே பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீஷியன் சுரேஷ் (62), இவரது மனைவி லேகா (50), மகன் மனு (27), பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாபு மனைவி சஜினி (52) ஆகியோருடன் வேனில் பழனிக்கு வந்தார். வேனை சுரேஷ் ஓட்டினார். திண்டுக்கல்- பழனி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடம்பட்டி பிரிவு பாலம் அருகே நள்ளிரவு 12.30 மணிக்கு வந்த போது, பழனியில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைக்கு பழைய இரும்பு ஏற்றி வந்த லாரியும், வேனும் மோதிக் கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே வேனில் பயணம் செய்த சசி, லேகா, சுரேஷ், மனு ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயங்களுடன் பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அபிஜித்தும், மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்ட விஜியம்மாவும் வழியிலேயே இறந்தனர். இதே போல் மதுரை கொண்டு செல்லப்பட்ட சஜினி புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ஆதித்யன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தகவலறிந்து அங்கு வந்த சத்திரப்பட்டி போலீஸார் டிஎஸ்பி. முத்துராஜன் தலைமையில் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மோதிய வேகத்தில் லாரிக்குள் புகுந்த வேனை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த ஓட்டுநர் அய்யப்பன் மீது சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே புதன்கிழமை பழனி அரசு மருத்துவமனைக்கு வந்த திண்டுக்கல் ஏடிஎஸ்பி. சுஹாசினி இறந்தவர்களின் சடலங்களை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து கேரளாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். மேலும் உயிரிழந்தவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் உள்ளிட்ட பொருள்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பழனி செஞ்சிலுவை சங்கம் சார்பில் உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் இலவசமாக கேரளா கோட்டயத்துக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments