FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சத்துணவுத் திட்டத்தை கவர்ச்சி திட்டமாக கருதவில்லை: நிதிக் குழுத் தலைவர் என்.கே.சிங் பேட்டி

இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் பின்பற்றும் சத்துணவுத் திட்டத்தை கவர்ச்சித் திட்டமாக கருதவில்லை என்று நிதிக் குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:


இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளும் பின்பற்றும் சத்துணவுத் திட்டத்தை கவர்ச்சித் திட்டமாக கருதவில்லை என்று நிதிக் குழு தலைவர் என்.கே.சிங் தெரிவித்தார்.
நிதிக் குழு ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு நிதிக் குழுத் தலைவர் என்.கே.சிங் அளித்த பேட்டி:-தமிழகத்தின் பொருளாதார மற்றும் திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனைகளை கடந்த இரண்டு நாள்களாக நடத்தினோம். 
முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்களுடனும் ஆலோசித்தோம். காட்சிப்படுத்துதல் வழியாகவும் தமிழகத்தின் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அரசு சார்பில் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.
கோரிக்கை மனுவில் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளும், கருத்துகளும் இடம்பெற்றிருந்தன. நிதிப் பகிர்வுக்கு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தினர். இன்றும் அதனை வலியுறுத்தினர்.
அப்போது மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்கு நடுநிலையாக இருந்து நிதிக் குழு செயல்படும் எனத் தெரிவித்தோம். நிதிக் குழுவானது கடந்த கடந்த காலத்தில், முழுமையான அளவில் பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டது. இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து 15-வது நிதிக் குழுவிலும் காக்கப்படும்.
தமிழகத்துக்கு பாராட்டு: பொருளாதார வளர்ச்சியிலும், தனிநபர் வருவாயிலும் தேசிய அளவைவிட தமிழகம் சிறப்பான இடத்தில் உள்ளது. நிதி மேலாண்மை சிறப்புடன் இருப்பதுடன், கடன் அளவும் ஏற்றுக் கொள்ளத்தக்க அளவில் கட்டுக்குள்ளே இருக்கின்றன. அதே சமயம் சில சவால்களையும் சந்தித்து வருகிறது. 
மாநிலத்தின் சொந்த வருவாய் குறைந்துள்ளன. நகர்ப்புற மக்கள் தொகை அதிகரிப்பில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 48.5 சதவீதமாக இருந்தது, இப்போது 50 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்படுகிறது.
நகரமயமாக்கல், இடம்பெயர்தல், பணிக்கு ஆள்கள் கிடைப்பது ஆகியனவும் மிகப் பெரிய சவால்களாக உள்ளன. இதுபோன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. வெள்ள மேலாண்மை திட்டம், வேளாண்மையை மேம்படுத்துதல், சென்னை போன்ற நகரில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்தல் போன்றவையும் பேசப்பட்டன.
கவர்ச்சிகரமான திட்டங்கள் ஒரு கட்டத்தைத் தாண்டி பலவகைகளில் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டமாக மாறி விடுகின்றன. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டம் என்பது இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திட்டமாக மாறியுள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவை உறுதி செய்வது மட்டுமல்லாது, அவர்களுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் திட்டமாகவும் அது விளங்கி வருகிறது. மேலும், அது நமது கல்வித் தரத்தை உயர்த்தும் கருவியாகவும் இருக்கிறது.
இதனை நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே, சத்துணவு போன்ற திட்டங்களை கவர்ச்சித் திட்டங்களாகக் கருதக் கூடாது என்பதை உணர்ந்துள்ளோம். அதுபோன்ற அம்சங்களை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் என்.கே.சிங்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments