FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சமூக பாதுகாப்புத் திட்டங்கள் கவர்ச்சித் திட்டங்கள் அல்ல!: நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரை

சமூக பாதுகாப்புத் திட்டங்கள், கவர்ச்சித் திட்டங்கள் அல்ல என்று 15-ஆவது நிதிக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 15-ஆவது நிதிக் குழு கூட்டத்தில் பங்கேற்ற குழுவின் தலைவர் என்.கே.சிங் (இடமிருந்து 6-ஆவது) மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,
பகிர்:


சமூக பாதுகாப்புத் திட்டங்கள், கவர்ச்சித் திட்டங்கள் அல்ல என்று 15-ஆவது நிதிக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழுவினர் தமிழக அரசுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலருடன் நிதிக் குழு ஆலோசனை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:-நிதிக் குழு அமைப்பானது எப்போதும் தமிழகத்தின் மிகப் பெரிய ஆதார அமைப்பாக விளங்கி வருகிறது. மத்தியில் இருந்து மாநிலத்துக்கு நிதிகளை பரிமாற்றம் செய்வதற்கான மிக முக்கிய மூல ஆதார அமைப்பாக நிதிக் குழுவை நாங்கள் எப்போதும் பார்த்து வருகிறோம். ஆனால், தமிழகத்தின் பங்காக பகிர்ந்து அளிக்கப்படும் நிதி, அண்மைக்கால நிதிக் குழுக்களால் குறைக்கப்பட்டே வருகிறது. மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்தின் பங்கானது 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட போதும் அது மாநிலத்துக்கு உதவிகரமாக இல்லை. 14-ஆவது நிதிக் குழு காலத்தில் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே வலியுறுத்தல்: 15-ஆவது நிதிக் குழுவின் வரைவு பரிந்துரைகளில் தமிழகத்தின் முக்கியமான கருத்துகளையும், கவலைகளையும் ஏற்கெனவே அதன் தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளேன். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை நிதிப் பகிர்வுக்கான அம்சமாக எடுத்துக் கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம். தங்களது சொந்த முயற்சிகளின் மூலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற முன்னோடி மாநிலங்களை தண்டிக்கும் வகையில் நிதிக் குழுவின் வரைவு பரிந்துரைகள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தேன்.
திட்டங்களைச் செயல்படுத்தும் மாநிலம்: மத்திய அரசின் முத்திரை பதிக்கும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தும் மிகச் சிறந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. ஆனால், இந்தத் திட்டங்களுக்கு மானியம் அளிக்க வகை செய்யும் பிரிவுகள் தொடர்பாக சில தீவிரமான கவலைகளும், கருத்துகளும் இப்போதும் எங்களுக்கு உள்ளன.
மக்களைக் கவரும் திட்டங்களுக்கான செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரைவு பரிந்துரைகளுக்கு நாங்கள் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். ஜனரஞ்சகம் என்பதற்கும், மக்களைக் கவர்வது என்ற சொல்லுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கின்றன. பள்ளிக் குழந்தைகளுக்கான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் என்பது ஜனரஞ்சகமான திட்டமாகும். ஒரு காலத்தில் அது கவர்ச்சித் திட்டமாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது இந்தத் திட்டத்தை மத்திய அரசானது தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாக அங்கீகரித்துள்ளது.
தமிழகத்தில் ஏராளமான சமூக நல பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திட்டமும் சமூக-பொருளாதாரக் கூறுகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் தகுதியான மற்றும் இலக்கு கொண்ட குழுவினருக்கு பயன் கிடைக்கும் வகையில் இருந்து வருகின்றன. எனவே, அவற்றை கவர்ச்சித் திட்டங்களாகக் கருதிட முடியாது. மாநில ஆட்சியாளர்களின் ஒட்டுமொத்த செயல் அறிவினை நிதிக் குழுவினர் தீர்மானிப்பது பொருத்தமற்றதாகும்.
கடந்த நிதிக் குழுவின் சில பரிந்துரைகள், மாநிலங்களுக்கு ஊக்கத் தொகைகளை அளிப்பதில் மாறுபாடான நிலைகளைக் கொண்டிருந்தன. இதனால், மாநிலத்தின் வளர்ச்சிகளுக்கான முயற்சிகளில் மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தமிழகம் போன்ற மாநிலங்களில் வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகளை தண்டிக்கும் வகையில் இருந்தது.
இந்தியா வளர்ச்சியடைய தமிழகம் போன்ற முற்போக்கான மாநிலங்களை ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தில் நீடித்த வளர்ச்சிக்கான முதலீடுகளுக்கு போதிய நிதி தேவையானதாக உள்ளது. எனவே, வளர்ச்சி மற்றும் நிதி பங்கீட்டுக்கு இடையிலான வெளியை சமமாக வைத்திட வேண்டுமென நிதிக் குழுவை வலியுறுத்துகிறேன்.
கடந்த காலங்களில் மத்திய அரசானது மாநிலத்துக்கான நிதியை போதிய அளவுக்கு பகிர்ந்து அளிக்கவில்லை என்று கணக்குத் தணிக்கை தலைவரே குறிப்பிட்டுள்ளார். இதனால், தமிழகம் அதிகளவு நிதியை இழந்துள்ளது. எனவே, கடந்த காலங்களில் பற்றாக்குறையாக இருக்கக் கூடிய நிதிப் பகிர்வுகளை ஆராய்ந்து அவற்றை விடுப்பதற்கான பரிந்துரைகளை உடனடியாக அளிக்க வேண்டும்.
மக்களின் நம்பிக்கை: பலதரப்பட்ட நிபுணத்துவம் கொண்டவர்களைக் கொண்டு இந்த நிதிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் கொண்ட ஒருவரை நீண்ட காலத்துக்குப் பிறகு தலைவராகப் பெற்றுள்ளது நிதிக் குழு. தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் நிதிக் குழுவின் மீது அதிகபட்ச நம்பிக்கைகளை வைத்துள்ளனர். எனவே, மக்களின் நம்பிக்கைகளை இந்தக் குழு மீட்டெடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments