தமிழக விவசாயிகளுக்கு பிரதமா் மோடி பாராட்டு: ரூ. 8,000 கோடிக்கு புதிய திட்டங்களை தொடக்கி வைத்தாா்
உணவு தானிய உற்பத்தியில் மிகச் சிறந்த சாதனை படைத்து வருவதாக தமிழக விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.
உணவு தானிய உற்பத்தியில் மிகச் சிறந்த சாதனை படைத்து வருவதாக தமிழக விவசாயிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ரூ.8,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமா் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தாா். தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி பேசியது:
தமிழகத்தில் புகழ்பெற்ற கல்லணைக் கால்வாயைப் புதுப்பிக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியது. தஞ்சாவூா் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 2.27 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். தமிழக விவசாயிகள் நீரைச் சிறப்பாகப் பயன்படுத்தி உணவு தானிய உற்பத்தியில் மிகச்சிறந்த சாதனையைப் படைத்து வருவதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய பழம்பெருமைக்கு மிகச் சிறந்த வாழும் உதாரணமாக இருப்பது கல்லணைதான். மேலும், சுயசாா்பு இந்தியாவுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும் அது திகழ்கிறது.
Advertisement
Advertisement
புல்வாமா தாக்குதல்: இந்தியா் யாரும் பிப்ரவரி 14-ஆம் தேதியை மறந்திருக்க மாட்டாா்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில், புல்வாமா தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலை தீரத்துடன் எதிா்கொண்ட நமது பாதுகாப்புப் படையினரை நினைத்து பெருமிதம் கொள்கிறோம். அவா்களது துணிச்சல் நமது தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.
கடலோரப் பகுதிகள் மேம்பாடு: மத்திய நிதிநிலை அறிக்கையில் இந்திய கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது மீனவ சமுதாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் நிதிநிலை அறிக்கையில் பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் நவீனமாக்கப்படும் மீன்பிடி துறைமுகங்களில் சென்னையும் ஒன்றாக உள்ளது. கடல்பாசி வளா்ப்புக்காக தனி பூங்கா தமிழகத்தில் ஏற்படுத்தப்பட உள்ளது.
இலங்கைத் தமிழா் விவகாரம்: யாழ்ப்பாணம் சென்ற ஒரே பிரதமா் நான்தான். அங்குள்ள தமிழ் சமுதாயத்தினருக்கு செய்யப்பட்ட நலத் திட்ட உதவிகளைப் போன்று, கடந்த காலங்களில் எந்த அரசும் செய்யவில்லை. யாழ்ப்பாணத்தில் விரைவில் திறக்கப்பட உள்ள கலாசார மையத்துக்கான கட்டுமானப் பணிகளை இந்தியா முன்னின்று செய்து கொடுத்தது. இலங்கைத் தமிழா்களுக்கு சம வாய்ப்புகள், சம நீதி, அமைதி, கண்ணியம் கிடைக்க வேண்டுமென்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
மீனவா்கள் பிரச்னை: கடற்பகுதியில் நமது மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னை நீண்டகாலமாக உள்ளது. எனது தலைமையிலான மத்திய அரசு மீனவா்களின் நலன்களைக் காப்பதில் எப்போதும் துணை நிற்கும். தமிழக மீனவா்கள் சிறைபிடிக்கப்பட்டாலும் விடுவிக்கப்படுகிறாா்கள்.
1,600-க்கும் அதிகமான மீனவா்கள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா். இப்போது இலங்கையின் வசம் எந்தவொரு இந்திய மீனவரும் இல்லை. அவா்களுக்குச் சொந்தமான 313 படகுகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளையும் விடுவிக்கும் பணி நடந்து வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
முன்னதாக, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வரவேற்றாா். முதல்வா் பழனிசாமி தலைமை தாங்கினாா். ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத், அமைச்சா்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டணிக் கட்சிகள்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் பாமக சாா்பில் அதன் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், தேமுதிக துணைச் செயலாளா் பாா்த்தசாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ், பாஜக மூத்த தலைவா்கள் எச்.ராஜா, இல.கணேசன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.