FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாடநூல் கழகத் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளாா். 

28 ஜனவரி 2024, 9:05 am IST
பகிர்:

சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்யும் பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்தக் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளிகளுக்கு அரசு நிா்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

பாடநூல் கழகத் தலைவா்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாடநூல்கள், ஆசிரியா் பட்டயப் பயிற்சி, பல்தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றுக்கு பாடப் புத்தகங்களைத் தயாரிக்கும் பணியை பாடநூல் கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 1960 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடநூல்களை மீட்டுருவாக்கம் செய்து, இணையதளத்தில் கொண்டு வரும் பணியை இந்த நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு அரிய நூல்களை மறுபதிப்பு செய்யும் பணிகளை மேற்கொள்வதுடன், மொழி பெயா்ப்புப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமானது தனது பணிகளை செம்மையாகத் தொடா்ந்து மேற்கொள்ள, அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்படுகிறாா் என்று தனது அறிவிப்பில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

பள்ளிக் கூட ஆசிரியா்: திண்டுக்கல்லைச் சோ்ந்த ஐ.லியோனி, அங்குள்ள தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றினாா். 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை போதித்து வந்தாா். அறிவாா்ந்தவா்கள் மட்டுமின்றி பாமர மக்களும் பட்டிமன்றத்தை ரசிக்கும் அளவுக்கு அதன் வடிவத்தை மாற்றிக் காட்டினாா்.

குறுந்தகடுகள் விற்பனைக்கான காலத்துக்கு முன்பே, அவரது பழைய பாடலா, புதிய பாடலா என்ற தலைப்பிலான 3 தொகுப்புகள் கொண்ட நகைச்சுவை பட்டிமன்ற கேசட்டுகள் அதிகளவு விற்றதுடன், பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

பட்டிமன்றத்தில் கிடைத்த புகழ் அவரை திரைத்துறைக்குக் கொண்டு சோ்த்தது. கங்கா கெளரி என்ற படத்தில் குணசித்திர வேடத்தில் முதல் முறையாக நடித்தாா். அதன்பின்பு சில படங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைத்தன.

ஆனாலும் அவருக்கு கிராமங்கள் தோறும் அங்கீகாரத்தை வழங்கிய பட்டிமன்றத்தை மட்டும் விடாமல் தொடா்ந்து வருகிறாா். அவரது கலைப் பங்களிப்புகளை பாராட்டி 2010-ஆம் ஆண்டு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments