'நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நிச்சயம் வரும்' - ஓபிஎஸ் பேச்சு
அடுத்த இரு ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
திருச்சி: அடுத்த இரு ஆண்டுகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறும், அதிலும் தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களை பிடிக்கும் என்றார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டடத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்கு வாக்குகள் சேகரித்து மேலும் அவர் பேசியது....
தமிழகத்தில் 10 ஆண்டு காலம் சிறந்த முதலமைச்சராக பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு பின்னர் 16 ஆண்டு காலம் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா முதல்வராகி பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை மக்களுக்கு நேரடியாக வழங்கியவர். அதனைத் தொடர்ந்து 4 ஆண்டு காலம் எடப்பாடி கே. பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை வழங்கினார். ஆக, மொத்தம் 30 ஆண்டுகள் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்த வரலாறு அதிமுகவுக்கு தான் உண்டு.
இந்த இயக்கத்திற்கு திமுகவினர் எண்ணற்ற பிரச்னைகளை கொடுத்தாலும் அதனை பொறுமையாக ஜெயலலிதா எதிர்கொண்டார். மூன்றாவது முறையும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால் பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்தது. அதனை நம்பிய மக்களும் திமுவுக்கு வாக்களித்தனர். மேலும் ,ஒரு சின்ன சறுக்காலால் அதிமுக ஆட்சியில் அமர முடியவிலலை. ஆனால், பொய்யான வாக்குறுதிகளை அளித்த திமுக, முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைத்து 10 மாதங்களாகியும் எந்த ஒரு புதிய நலத்திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்துமே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறார்.
2007ல் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி (காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வந்தது) ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி அதற்கான அரசாணையை பெறவில்லை. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் சென்று 2010-ல் நடுவர்மன்ற இறுதித் தீர்ப்புக்கு அரசு ஆணை பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. பேரிடர் காலங்களில் உடனடியாக மக்களுக்கு நிவாரணம் வழங்கியது அதிமுக ஆட்சி தான். அதிமுக ஆட்சியின்போது, கரோனோவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பாரத பிரதமரே கூறினார்..
மொத்தம் 505 பொய்யான வாக்குறுதிகளை திமுகவினர் வழங்கியுள்ளனர். ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனே முதல் கையெழுத்து நீட் ரத்துக்கு என்றார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரால் அதை செயல்படுத்த முடியவில்லை, செய்யவும் முடியாது. நேரடியாக நகர்ப்புற தேர்தலை நடத்த இவர்களுக்கு அச்சம். ஏனென்றால் மக்கள் வெளியே எங்கு சென்றாலும் வாக்குறுதிகள் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
பொங்கல் தொகுப்பாக தமிழக மக்களுக்கு 2500 ரூபாய் எல்லோருக்கும் கொடுத்த ஒரே கட்சி அதிமுக. ஸ்டாலின் இதுபோதாது ரூ. 5000 கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 ரூபாய் கூட கொடுக்கவில்லை. இதுபோல எந்த வாக்குறுதிகளையும் திமுக ஆட்சியில் நிறைவேற்றவில்லை. இதை மக்களே உணர்ந்து விட்டனர். இந்த சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இவர்களது முகமூடியை முழுவதுமாக கிழிப்பதற்கு நல்வாய்ப்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைந்துள்ளது.
இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளது. ஆனால் தொண்டர்களால் கட்டிக் காக்கப்படும் கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். எனவே எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதாவின் சாதனைகள் எல்லாம் தாண்டி தொண்டர்களை முன்நிறுத்தி தான் வாக்குகளை கேட்போம். இன்னும் 2 ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழக சட்டப்பேரவைக்கு உறுதியாக தேர்தல் வரும். அதில் அதிமுகவுக்கு வெற்றி உறுதி.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து என்று கூறினார்கள். அதுவும் செய்யவில்லை. இதனால் அதிமுகவுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே அதிமுக அரசின் சாதனைகளையும், திமுகவின் பொய் பிரசாரத்தையும் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி நமது வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு 100 சதவீதம் வெற்றி உறுதி என்றார் அவர். .
நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி என். நடராஜன் (மாநகரம்), புற நகரச் செயலாளர்கள் ப. குமார் (தெற்கு மாவட்டம்), மு. பரஞ்சோதி (வடக்கு) முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.