தமிழ்நாடு

உழவர்களுக்குத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN

தஞ்சாவூர்: உழவர்களுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட மக்களிடையே செவ்வாய்க்கிழமை மாலை காணொளி காட்சி மூலம் அவர் பேசியது:
இந்த ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேட்டூர் அணையை ஜூன் 12 ஆம் தேதி திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதி வரை காவிரி நீர் செல்லும் வகையில் ரூ. 65 கோடி மதிப்பில் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நிகழாண்டு நெல் சாகுபடி 18.53 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதையும் விஞ்சி 20.13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து, சாதித்து காட்டியது இந்த அரசு. கடந்த 8 மாதங்களில் டெல்டா மாவட்டங்களில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோல, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய நவீன அரிசி ஆலை, புதுக்குடியில் கால்நடை தீவன தொழிற்சாலை, திருமண மண்டபங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் இயக்கம் திமுகதான். காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தது, நீர் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு அமைத்தது போன்றவற்றுக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி. இப்படி நீண்ட நெடிய போராட்டங்களை நடத்தி காவிரி உரிமையைக் காப்பாற்றிய இயக்கம் திமுக.
ஆனால், போராடி பெற்ற இறுதித் தீர்ப்பில் 14.75 டிஎம்சி தண்ணீரை கோட்டை விட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சி. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப் போராடியதும் திமுகதான். ஆனால், அதிகாரமற்ற அமைப்பை ஒன்றிய அரசு அமைத்தது. அதை எடப்பாடி பழனிசாமி தட்டிக் கேட்காமல், ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.

வயிற்றுக்குச் சோறு போடும் விவசாயிகளைத் தரகர்கள் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, பச்சைத் துண்டைப் போட்டுக் கொண்டு துரோகம் செய்தவர். அவரை இந்தத் தேர்தலிலும் மக்கள் தோற்கடிக்க வேண்டும். ஒன்றிய அரசுக் கொண்டு வந்த 3 வேளாண் புதிய சட்டங்கள் கார்பரேட்டுக்கு ஆதரவானதாக இருந்தபோதிலும், அவற்றை உழவர்களுக்குப் பயனளிப்பவை எனக் கூறியவர் எடப்பாடி பழனிசாமி. எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராகச் செயல்பட்டார். குடி மராமத்து திட்டம், கஜா புயலின்போது மரங்களை அப்புறப்படுத்துவதில் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டார்.

ஆனால், உழவர்களைக் காக்கும் அரசாக திமுக அரசுச் செயல்படுகிறது. இலவச மின்சாரம், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய சட்டப்பேரவையில் தீர்மானம், வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை என பல நடவடிக்கைகளை எடுத்தது திமுக. வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றப்படுவதன் மூலம் வேளாண் புரட்சி நிகழப் போகிறது.

எனவே, மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தந்த வெற்றியைப் போல இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

இந்தக் காணொளி காட்சியில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், சாக்கோட்டை க. அன்பழகன், வடக்கு மாவட்ட அமைப்பாளர் எஸ். கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT