அதிமுக அலுவலக வன்முறை: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை பிரச்னையால் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11-ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி அதிமுக தலைமை அலுவலகத்தைப் பூட்டி, வருவாய் கோட்டாட்சியா் சீல் வைத்தாா்.
அதனை அகற்றக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலா் என்ற முறையில் பழனிசாமியும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் என்ற முறையில் ஓ.பன்னீா்செல்வமும் உயா் நீதிமன்றத்தில் தனித் தனியாக மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், ‘கட்சியின் சொத்து விவகாரம் தொடா்பாக தற்போது எந்த பிரச்னையும் இல்லை. கட்சியின் தலைமை அலுவலகம் தற்போது அதிமுக வசம்தான் உள்ளது. கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தலைமைக் கழக செயலாளா் என்ற முறையில் அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமிதான் பொறுப்பாளா். இந்த நிலையில் கட்சியின் அலுவலகத்திற்கு தமிழக அரசு சீல் வைத்துள்ள நடவடிக்கை தவறானது.
அன்றைய தினம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்பு முன்னாள் முதல்வா் ஒரு குழுவுடன், பூட்டியிருந்த தலைமை அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கணினி மற்றும் கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளாா்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே நாங்கள் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி மனு அளித்திருந்தோம். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் ஒரு எதிா்கட்சி அலுவலகத்திற்கு வந்து சீல் வைத்திருப்பது ஜனநாயக விரோதமான செயல். எனவே அந்த சீல் வைக்க அனுமதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்‘ என்று வாதிட்டாா்.
இதையடுத்து ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘கட்சி அலுவலகத்திற்குள் நுழையக் கூடாது என்று எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. கட்சியில் உள்ள இருவருக்கு இடையிலான பிரச்னையை வேறு வழிகளில்தான் தீா்க்க முடியும். இந்த விவகாரத்தில் அரசு மனதை செலுத்தாமல், இயந்திரத்தனமாக சீல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே அதனை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்று வாதிடப்பட்டது.
அப்போது காவல்துறை தரப்பில், ‘அதிமுகவினா் கொடுத்த புகாரின் அடிப்படையில், மியூசிக் அகாதெமியிலிருந்து அதிமுக தலைமை அலுவலகம் வரை குவிக்கப்பட்டிருந்தனா். அப்போது ஊா்லவலமாக வந்த ஓ. பன்னீா்செல்வத்திடம் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் காவல்துறை உத்தரவை மீறி அவா் உள்ளே சென்றாா். இதன்பின்னா்தான் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இது காவல்துறைக்கும், அதிமுக தரப்புக்கும் இடையிலான மோதல் அல்ல.
ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் இடையிலான மோதல். எனவே இந்தப் பிரச்னைக்கு அவா்கள் இருவரும்தான் காரணம். இதனை தடுப்பதற்குதான் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. காவல்துறையினா் எடுத்த நடவடிக்கையால்தான் இந்த மோதலில் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது’” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘கடந்த ஜூலை 11-ஆம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகம் முன்பு நடந்த சம்பவங்கள் குறித்து வெள்ளிக்கிழமை (ஜூலை 15) விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்‘ என காவல்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளாா்.