கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு: ராஜாவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்
வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனதாக கூறப்படும் காரவடையான் என்கிற ராஜாவின் சடலம் ஞாயிற்றுக்கிழமை கோவிந்தபாடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம்: மேட்டூர் அருகே தமிழக கர்நாடக எல்லை வனப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்துபோனதாக கூறப்படும் காரவடையான் என்கிற ராஜாவின் உடல் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை கோவிந்தபாடி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
கடந்த 14 ஆம் தேதி இரவு தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பாலாற்றை பரிசலில் கடந்து கர்நாடக வனப்பகுதிக்கு சென்ற மூவரை நோக்கி கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
அப்போது பரிசலில் சென்றவர்கள் பாலாற்றில் குதித்து நீந்தி தப்பி சென்றனர். இவர்களில் கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (39) என்பவர் காணாமல் போனார். அவரது சடலம் நேற்று முன்தினம் பாலாற்றில் தமிழக எல்லை பகுதியில் மீட்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஈரோடு மாவட்டம் பவானி காவல் உட்கோட்டம் பருகூர் போலீசார் வழக்கு பதிந்து உடல் கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உடல் கூராய்வுக்கு பின்னர் ராஜாவின் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். சடலம் சொந்த ஊரான கோவிந்தபாடி மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அவரது சடலம் கோவிந்தாபாடி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
கருணை அடிப்படையில் ராஜாவின் மனைவி பௌனாவிற்கு கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தைகள் பராமரிப்பு பணி வழங்கியதற்கான ஆணையை சேலம் காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் வழங்கி உள்ளார்.
மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.
மேலும், மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் சதாசிவம் மற்றும் தமிழ்குமரன் சார்பில் ராஜாவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.50 ஆயிரம் நிதி உதவி செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.