FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம்:  உயா்நீதிமன்றத்தில் வாதம்

‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது’ என அத்துறை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டாா்.

Updated On : 13 ஜூலை 2023, 8:15 am IST
பகிர்:


சென்னை: ‘செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது’ என அத்துறை சாா்பில் உயா்நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டாா்.

செந்தில் பாலாஜி கைது தொடா்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆள்கொணா்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் இரண்டாவது நாளாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதங்களை முன்வைத்தாா்.

‘சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத் துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது என்பது வழக்கை புலன் விசாரணை செய்யும் அமலாக்கத் துறையின் கடமையை மறுப்பதாகும்.

Advertisement

Advertisement

ஆதாரங்களை சேகரிக்கும் அமலாக்கத் துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணைதான்.

உரிய காரணங்கள் இல்லாமல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் வகை செய்துள்ளதால், 2005-ஆம் ஆண்டுமுதல் இதுவரை, இச்சட்டத்தின் கீழ் 330 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா். அமலாக்கத் துறை புலன் விசாரணை செய்ய முடியாது என்ற மனுதாரா் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல.

அமலாக்கத் துறையின் புலன் விசாரணையால், வங்கி மோசடி வழக்குகளில், ரூ. 19,000 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறைக்கு அதிகாரம்: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன்பு சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம்தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. எனவே, புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.

கைதுக்கு பிறகும், புகாா் தாக்கலுக்கு பிறகும், புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் குறைந்தபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் என்பதாலும், கைது செய்த அமலாக்கத் துறை ஜாமீன் வழங்க முடியாது என்பதாலும் அமலாக்கத் துறைக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால், சுங்க வரி சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் ஓராண்டு முதல் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. கைது செய்த அதிகாரிகளே ஜாமீனில் விடுதலை செய்யக்கூடிய குற்றங்களும் உள்ளதால், அந்த சட்டங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு காவல் துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. கைது நடவடிக்கை சரியானதுதானா? என்பதை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட நபரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது. காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி தொடா்ந்து நீதிமன்றக் காவலில் நீடிக்க வேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவு என்பது, ஜாமீன் வழங்க மறுத்ததுதான். எனவே, அதன் காரணமாக அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என்பதல்ல. அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்ய எந்தத் தடையும் விதிக்கவில்லை. அப்படி காவல் கோரியது நீதிமன்ற உத்தரவை மீறியதும் அல்ல என்று வாதிட்டாா்.

உச்சநீதிமன்றம் சென்றது ஏன்?: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவலில் விசாரிக்க அனுமதி பெற்ற நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து ஏதேனும் நிகழ்ந்தால் யாா் பொறுப்பேற்க முடியும்? அதனால் நிபந்தனைகளை எதிா்த்து உச்சநீதிமன்றத்தை நாடினோம். காவலில் எடுத்திருந்தால் முதல் 15 நாள்களை கருத்தில் கொள்ளக்கூடாது எனக் கோர முடியாது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவலில் உள்ள செந்தில் பாலாஜி, சட்டவிரோத காவலில் இல்லை. எனவே, இந்த ஆள்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரியதில் இருந்து நீதிமன்றக் காவலில் இருப்பதை அவா் ஏற்றுக் கொண்டிருக்கிறாா். செந்தில் பாலாஜி கைதின்போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக நீதிபதி பரத சக்கரவா்த்தி தனது தீா்ப்பில் கூறியிருக்கிறாா். கைது செய்யப்பட்ட முதல் 15 நாள்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடியாவிட்டால், அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என கோர முடியும்.

மூத்த நீதிபதி நிஷா பானு தீா்ப்பை ஏற்றுக் கொண்டால் எவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டாம். ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தால் போதுமானது. பொதுவாக அனைவரது இதயத்திலுமே 40 சதவீத அடைப்பு இருக்கும் எனக் கூறி துஷாா் மேத்தா, தனது வாதத்தை நிறைவு செய்தாா்.

இதையடுத்து மேகலா தரப்பு பதில் வாதத்துக்காக வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments