முகப்பு
தமிழ்நாடு

திருவொற்றியூரில் கோயில் காளை இறப்பு: பக்தர்கள் அஞ்சலி!

திருவொற்றியூரில் கோயில் காளை மாடு இறப்புக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாலு மாட வீதியில் ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 29 ஆகஸ்ட் 2023, 11:49 am IST
பகிர்:

திருவொற்றியூரில் கோயில் காளை மாடு இறப்புக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் நாலு மாட வீதியில் ஊர்வலமாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் காளை மாடு ஒன்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக  4 மாட வீதிகளில் சுற்றி வரும் அந்த ராட்சத  காளை மாட்டை பக்தர்கள் நந்தீஸ்வரன் என பயபக்தியுடன் கும்பிடுவது வழக்கம்.  

பக்தர்கள் கீரை கட்டுகள் மற்றும் புல் வாங்கி உணவாக கொடுப்பார்கள். பொதுமக்கள் ராட்சத உருவம் கொண்டிருந்தாலும் தொந்தரவு செய்ததில்லை. சென்னை மாநகரில் சிறுமி மீது மாடு மோதிய சம்பவத்தில் சாலை ஓரம் திரியும் மாடுகள் மீது மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்தது. அதில், இந்த ராட்சத கோயில் மாடு மாநகராட்சி நடவடிக்கைக்கு உட்பட்டது. 

Advertisement

கடந்த திங்கள்கிழமை இந்த மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த மாட்டிற்கு உரிமையாளர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அது அங்கேயே  கட்டி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த பக்தர்கள் சிலர் அபராதம் கட்டி நேற்று மாலை 3 மணி அளவில் மாட்டை திருவொற்றியூர் சன்னதி தெருவில் இறக்கி விட்டுள்ளனர். மாடு மிகவும் சோர்வாக நோய்வாய்பட்டது போல் இருந்துள்ளது. இரவு 8 மணி அளவில் திடீரென  குளக்கரை அருகில் படுத்து உயிரை விட்டுள்ளது. 

இது குறித்து தகவல் அறிந்த சிவ பக்தர்களும் வடிவுடையம்மன் கோயில் பக்தர்களும் ஏராளமாக ஒன்று கூடினர். அவர்கள் இந்த மாட்டை இந்து சம்பிரதாயபடி இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என முடிவு செய்தனர். இது குறித்து மண்டல குழு தலைவர் திமு தனியரசுவிடம் கூறினர். அவர் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். 

நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த மாட்டுக்கு குங்குமம் சந்தனம் தெளித்து ஆன்மீக முறைப்படி மலர்மாலைகள் அணிவித்து அதை ஊர்வலமாக நாலு மாட வீதிகளிலும்  மேளதாளங்கள் தாரை தப்பட்டைகள் முழங்க மாடு இறுதி ஊர்வலம் நடத்தினர். பக்தர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். நள்ளிரவு 2 மணி அளவில் மாட்டை புதைப்பதற்காக மணலி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குழி தோண்டி புதைத்தனர். அப்போதும் ஆன்மீக முறைப்படி பல சடங்குகள் செய்தனர்.  

இதுகுறித்து கண்ணப்பன் என்பவர் நிருபர்களிடம் கூறும் போது, இந்த மாடு யார் விட்டது என தெரியாது. ஆனால் எல்லோரும் அந்த மாட்டை நந்தீஸ்வரர் என கூப்பிடுவார்கள். ஆனால் யாருக்கும் அது எந்த துன்பமும் விளைவித்ததில்லை. பார்க்க ராட்சத உருவமாக இருக்கும் இந்த மாட்டை மாநகராட்சி பிடித்துக் கொண்டு போன பிறகு சரியாக சாப்பிடவில்லை என தெரிகிறது. 

நோய் வாய்ப்பட்டு அதனால் இறந்திருக்கலாம் என நினைக்கிறோம். மாடு இறந்தது பல்வேறு பக்தர்களுக்கு தெரியாது. அவற்றை நாங்கள் புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம்  பக்தர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர் எனக் கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.