முகப்பு
தமிழ்நாடு

கோவையில் பரோட்டா சாப்பிட்டு உறங்கிய மருத்துவ மாணவி பலி!

கோவையில் மருத்துவம் பயின்றுவரும் 2ம் ஆண்டு மாணவி இரவு உறக்கத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 2 டிசம்பர், 2024 at 11:20 AM
மருத்துவ மாணவி பலி
பகிர்:

கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த கீர்த்தனா என்ற மருத்துவ மாணவி, பரோட்டா சாப்பிட்டு இரவு உறங்கச் சென்றவர் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை, துடியலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பேர்லேண்ட் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் ( 62). இவர் கட்டுமான ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது மகள் கீர்த்தனா (வயது 21). இவர் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள பிரபல மருத்துவக் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக கல்லூரியில் உள்ள விடுதியில் கீர்த்தனா தங்கி இருந்தார்.

Advertisement

வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் விடுமுறை நாள்களை கீர்த்தனா கழித்து விட்டுச் செல்வார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல வீட்டிற்கு வந்து இருந்தார்.

கீர்த்தனா சனிக்கிழமை இரவில் சாப்பிடுவதற்கு பரோட்டா வேண்டுமென கேட்டு உள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு குடும்பத்தினர் கடையில் பரோட்டா வாங்கி கொடுத்து உள்ளனர். அதை கீர்த்தனா சாப்பிட்டார்.

பிறகு இரவு அவரது அறைக்குச் சென்று தூங்கினார். வழக்கமாக கீர்த்தனா காலையில் சீக்கிரம் எழுந்து விடுவார். ஆனால் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரது அறைக்கு எழுப்பச் சென்று உள்ளனர். அப்போது அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. எழுப்பி பார்த்த போது அவரது உடலில் அசைவு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக கீர்த்தனாவை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு கீர்த்தனாவை கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் கூறினர். உடனே அவர் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments