நள்ளிரவில் சாத்தனூர் அணை திறப்பு: அரசின் அலட்சியத்தால் பாதிப்பு! -இபிஎஸ் குற்றச்சாட்டு
ரெட் அலர்ட் விடுத்த போதும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை! இபிஎஸ்
எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி சேலத்தில் ஃபென்ஜால் புயலால் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இன்று (டிச. 3) நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பின் செய்தியாளா்களுடன் பேசிய அவர், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த போதும் திமுக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தினார். மேலும், சாத்தனூர் அணையிலிருந்து முன் அறிவிப்பின்றி தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது உள்ளிட்ட நிர்வாகக் குளறுபடிகளே தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு காரணமெனவும் தெரிவித்தார்.
எடப்பாடி கே. பழனிசாமி கூறியிருப்பதாவது, “ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழையால் சேலத்திலும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
திருமணிமுத்தாற்றில் தூர்வாரும் பணி முறையாக நடைபெறவில்லை. திமுக அரசு, சேலம் மாநகராட்சியும் சரியாக செயல்படாததால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மாநகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இந்தளவுகு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
நள்ளிரவு 2 மணியளவில் சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் கன அடிக்கும் மேல் நீர்திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முன்னறிவிப்புகள் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
தென்பெண்ணையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்காமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்பெண்ணையாற்றின் கரை உடைந்ததால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் அலட்சியத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் அதிமுக நிர்வாகிகள் உதவிகளை செய்து வருகின்றனர். ஏற்காட்டில் பல பகுதிகளில் மண் சரிந்துள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இவற்றையெல்லாம் அரசு போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக, திருவண்ணாமலையில் மண் சரிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார். மண் சரிவில் சிக்கிய 7 பேரும் உயிருடன் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அவர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த துயரத்தை தருவதாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.