மாநில பட்டியலுக்கு கல்வி, சுகாதாரத்தை மாற்ற வேண்டும்: விஜய்
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று விஜய் பேச்சு.
தமிழ்நாடுமாநில பட்டியலுக்கு கல்வி, சுகாதாரத்தை மாற்ற வேண்டும்: விஜய்
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று விஜய் பேச்சு.
பொதுப் பட்டியலில் இருந்து கல்வி, சுகாதாரத்தை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெற்று வருகின்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து நீக்கக் கோரி பேசியதாவது:
“1975-க்கு முன்னால் கல்வி என்பது மாநில பட்டியலில் தான் இருந்தது. அதன்பிறகு தான் மத்திய அரசின் கீழ் வந்தது. இரண்டாவது ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது கல்வி கற்கும் நோக்கத்துக்கு எதிரானது. ஒவ்வொரு மாநிலத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் இருக்க வேண்டும். மாநில கல்வித்திட்டத்தில் படித்துவிட்டு என்சிஆர்டி திட்டத்தில் தேர்வு வைப்பது, குறிப்பாக மருத்துவ படிப்புகளுக்கு வைப்பது கடினமான ஒன்று.
இதற்கெல்லாம் நிரந்தர தீர்வாக பொதுப் பட்டியலில் இருந்து கல்வி, சுகாதாரத்தை நீக்கி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும். அதில் சிக்கல் இருப்பின், அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்து சிறப்புப் பொதுப் பட்டியல் உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை கொண்டு வரவேண்டும். மாநில அரசுக்கு கல்வி, சுகாதாரத்தில் முழு சுதந்திரத்தை தர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக ஜூன் 28ல் கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொகுதிவாரியாக தவெக தலைவரும் நடிகருமான விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
அப்போது, தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் தேவை, நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்தும் நடிகர் விஜய் பேசியிருந்தார்.