FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மதிக்காத மக்கள்: முதல்வர் ஸ்டாலின் நன்றி

பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை மதிக்காத மக்கள் என்று கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

13 ஜூலை 2024, 3:50 pm
மு.க. ஸ்டாலின்
பகிர்:

சென்னை: பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள் என்று கூறியிருக்கிறார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியாகியிருக்கும் நிலையில், அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் 2019 முதல் இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது! விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய தொகுதி மக்களுக்கும் உழைத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

மேலும், முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான - மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பாஜக, தனது அணியில் இருக்கும் பா.ம.க.வை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு முதல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது.

திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது. நாள்தோறும் நல்ல பல திட்டங்கள் என சாதனைகள் செய்து வரும் நமது கழக அரசின் சாதனைகளுக்கு மகுடம் சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.