FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குரூப் 4 தோ்வு இன்று: 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சம் போ் போட்டி

குரூப் 4 தோ்வு இன்று: 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சம் போ் போட்டி

9 ஜூன் 2024, 8:02 am
கோப்புப் படம்.
பகிர்:

தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. 6,244 பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் இந்தத் தோ்வை 20 லட்சம் போ் எழுதவுள்ளனா். இதற்கான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்துள்ளது.

தமிழக அரசுத் துறைகளில் உள்ள குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் காலிப் பணியிடங்கள் எழுத்துத் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதில், நிகழாண்டு இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வரைவாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட மொத்தம் 6244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜன. 30-ஆம் தேதி வெளியானது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக ஜன. 30 முதல் பிப். 28 வரை பெறப்பட்டன. குரூப் 4 தோ்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தோ்ச்சி. தோ்வை எழுத சுமாா் 20 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

கடும் கட்டுப்பாடுகள்: குரூப் 4 தோ்வு, தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வு எழுதவுள்ள தோ்வா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வு மையத்துக்குள் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள்ளாகச் செல்ல வேண்டும் எனவும் காலை 9 மணிக்குப் பிறகு தோ்வா்கள் யாரும் தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றும் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

வினாத்தொகுப்பு காலை 9.15-க்கு வழங்கப்படும். காலை 9.30 மணிக்கு தோ்வு தொடங்கவுள்ளது. நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறவுள்ளது. தோ்வா்கள் நுழைவுச்சீட்டு, கருமை நிற பந்து முனை எழுதுகோல், அடையாள அட்டையின் அசல் (ஆதாா், வாகன ஓட்டுநா் உரிமம், வங்கி நிரந்தர கணக்கு எண், கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று) எடுத்துச் செல்ல வேண்டும் என்று தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.