அமலாக்கத்துறை சோதனை: தில்லியில் துரைமுருகன்!
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் துரைமுருகன் தில்லி பயணம்...
அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்ற நிலையில், அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச் செயலரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்த் ஆகியோரின் வீடுகளில் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும், துரைமுருகனின் ஆதரவாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சில ஆவணங்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனிடையே, காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இரண்டாவது நாளாக விடிய விடிய அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிறைவடைந்தது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து சனிக்கிழமை இரவு 10 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் தில்லி சென்றுள்ளனர்.
தமிழக அரசுமுறைப் பயணமாக துரைமுருகன் தில்லிக்கு சென்றுள்ளாரா? அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக சென்றுள்ளாரா? என்ற தகவல்கள் வெளியாகவில்லை.