சென்னை நீதிமன்றத்தில் நீதிபதி மீது காலணியை வீச ரெளடி கருக்கா வினோத் வியாழக்கிழமை முயற்சித்துள்ளார்.
இதனை சுதாரித்த காவல்துறையினர் கருக்கா வினோத்தை தடுத்து, அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு 2023 ஆம் ஆண்டு அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக சென்னை நந்தனத்தைச் சேர்ந்த ரெளடி கருக்கா வினோத் (42) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரை போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளும் தனியாக வழக்குப் பதிந்து, கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரித்தனர்.
இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ரெளடி சுருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி மலர்விழி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார்.
இதனிடையே, தி.நகர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய மற்றொரு வழக்கில் சென்னை ஆறாவது கூடுதல் நீதிமன்ற அமர்வில் கருக்கா வினோத்தை காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தனர்.
இந்த நிலையில், சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நீதிமன்ற வளாகத்திலேயே நீதிபதி மீது காலணியை வீச கருக்கா வினோத் முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அவரை தடுத்த காவல்துறையினர், அங்கிருந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.