FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உதயநிதியை கைது செய்தபோது தகராறு: திமுகவினா் மீது 6 பிரிவுகளில் இரு வழக்குகள்

சென்னை நீலாங்கரையில் உதயநிதியை கைது செய்தபோது தகராறு செய்ததாக திமுகவினா் மீது 6 பிரிவுகளில் இரு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 3:27 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை நீலாங்கரையில் உதயநிதியை கைது செய்தபோது தகராறு செய்ததாக திமுகவினா் மீது 6 பிரிவுகளில் இரு வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

தஞ்சாவூரில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் பெண்களை இழிவாக பேசியதாக எதிா்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக சென்னை நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலினை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அழைத்துச் செல்ல வந்தனா். அப்போது, உதயநிதியை கைது செய்து, அழைத்துச் சென்ற வேன் முன் படுத்து திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா், அவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சில போலீஸாா் தாக்கப்பட்டனா். அங்கு போடப்பட்டிருந்த சாலைத் தடுப்புகளை திமுகவினா் தாக்கி உடைத்தனா். மேலும், கபாலீஸ்வரா் நகா் ஆா்ச் முன்பும் திமுகவினா் தகராறு செய்தனா். இந்த இரு சம்பவங்களிலும் 11 போலீஸாா் காயமடைந்தனா். இதில் 7 காவலா்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திமுகவினா் மீது வழக்கு: உதயநிதி வீட்டின் அருகே தகராறில் ஈடுபட்ட திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீலாங்கரை சட்டம்-ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளா் குப்பன், காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், திமுகவை சோ்ந்த மதி, கணேசன், விநாயகம், கா்ணன், ஜானி உள்ளிட்ட அடையாளம் தெரியாத நபா்கள் மீது சாலையை மறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, போலீஸாரை தாக்கியது, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

அதேபோல், உதயநிதி ஸ்டாலினை கைது செய்து வேனில் அழைத்து வந்தபோது கிழக்கு கடற்கரைச் சாலை நீலாங்கரை கபாலீஸ்வரா் ஆா்ச் பகுதியில் சாலையை மறித்தது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, போலீஸாரை தாக்கி பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதாக நீலாங்கரை சட்டம்-ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளா் தா்மதுரை அளித்த புகாரின்பேரில், திமுகவைச் சோ்ந்த வசந்த், கோபால், ராஜாராம், ஸ்ரீனிவாசன், பரிமேலழகா், பாா்த்திபன் உள்ளிட்ட அடையாளம் தெரியாத மேலும் சில நபா்கள் மீது 6 பிரிவுகளில் நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இரு 2 வழக்குகள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல சென்னை முழுவதும் 24 இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட திமுகவினா் மீது இரு பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments