FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை - சிபிஐ அறிக்கை

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது பற்றி...

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 3:56 pm IST
மு. வீரபாண்டியன் - DIN
பகிர்:

தமிழ்நாடு பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2026 - 2027 ஆம் ஆண்டுக்கான தமிழகத்தின் திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சா் என். மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார்.

இது குறித்து இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

Advertisement

Advertisement

தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026 -2027 ஆம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட் கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியை மாணவர்கள் இளைஞர்களுக்கு வழங்கிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஆயினும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 4000 நிவாரண உதவி வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதி வழங்கியது. அது குறித்த அறிவிப்பு இல்லை என்பது வேலை இல்லா இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கும்.

ஒப்பந்தப்பணியாளர்கள், தற்காலிக பணியாளர்களின் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லை என்பது பெரும் பகுதி தொழிலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏமாற்றம் அளிக்கும்.

குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும்; ஆண்டுதோறும் வீடுகளுக்கு 6 சமையல் எரிவாயு உருளை இலவசமாக வழங்கப்படும் என தவெக அளித்த தேர்தல் வாக்குறுதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பதும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

காலை உணவுத் திட்டத்தை அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் பெற்று வந்தனர். அதை ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை நீட்டிப்பது வரவேற்பிற்குரியது.

மூத்த குடிமக்களுக்காக ஆயிரம் நடமாடும் மருத்துவ மையங்கள் அறிவிப்பு வரவேற்புக்குரியது.

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராடி வரும் நிலையில், அது குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்பது விவசாயிகளை ஆத்திரமூட்டும்.

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் குறித்த தவெகளின் வாக்குறுதி குறித்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

சென்ற 2025-26 பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கிய நிலையில் இந்த பட்ஜெட்டில் அது ரூ.44,527 கோடியாக குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தது சரியல்ல. அதே போல் உயர் கல்வித்துறைக்கு 2025-26 ல் ரூ.8,494 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அது இந்த பட்ஜெட்டில் ரூ.8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது வருந்தத்தக்கது.

அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோருவதில் நிலவி வந்த ஊழல் முறைகேடுகளை தடுத்து, வெளிப்படை தன்மை நடைமுறைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதை விளக்கியுள்ளது. இதில், ஒப்பந்தப் பணி நிறுவனங்கள் எந்தத் துறையில் பதிவு செய்து இருந்தாலும், அரசின் அனைத்துத்துறை ஒப்பந்தப் பணிகள் ஏலத்திலும் பங்கேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முறையால் ஏலம் கோரும் ஒப்பந்த நிறுவனங்கள் குறைந்த மதிப்பீட்டை குறைத்துக் கொண்டு ஏலம் கோரும் வாய்ப்புகள் உருவாகும் எனினும், அவர்கள் மேற்கொள்ளும் பணிகளின் தரமும், உறுதியும் குறையாமல் இருப்பதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக மக்களுக்கு உறுதி அளித்தபடி, அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், 8 கிராம் தங்கம், மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டம், உயர் கல்விக்கு செல்லும் போது எதிர் கொள்ளும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ள பயிற்சி மையங்கள், தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில் பயிற்சி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில் பிரிவு தொடங்குவது, மின்சார வாகன விற்பனைக்கு ஊக்கமளிப்பது போன்றவற்றில் நிதிநிலை அறிக்கை கவனம் செலுத்தியுள்ளது.

இரு மாதங்களில் 500 யுனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு 200 யுனிட் விலையில்லா மின்சாரம் வழங்குவது, நீண்ட கால சவாலாக நீடித்து வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க உறுதி அளித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்துள்ள விபி ஜி ராம்ஜி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆண்டுக்கு 125 நாள் வேலை வழங்க உறுதியளித்துள்ளது. இத்திட்டத்திற்கு மாநில அரசு ரூ.5,057 கோடி நிதிப் பங்களிப்பு செலுத்த வேண்டும். இந்த நிலையில் மாநில அரசு கூடுதலாக 25 நாட்களை சேர்த்து ஆண்டுக்கு 150 நாட்களாக வேலை வழங்கும் என கூறும் நிதிநிலை அறிக்கை, அதற்காக ரூ.100 கோடி மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது போதுமானதல்ல.

தவெக அரசின் நிதிநிலை அறிக்கை சில பிரிவுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கும் எனினும் பெரும் பகுதி, மக்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொள்ளவில்லை என்று மு. வீரபாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.

summary

M. Veerapandian, State Secretary of the Communist Party of India, has issued a statement saying that the Tamil Nadu budget has not met the people's expectations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments