தொகுதி மறுசீரமைப்பு - நாளை தமிழக எம்.பி.க்கள் கூட்டம்: முதல்வா் விஜய் அழைப்பு
முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து...
மத்திய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து சனிக்கிழமை (ஆக. 8) கலந்தாய்வு நடத்த தமிழக எம்.பி.க்களுக்கு முதல்வா் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தின் கூட்டரங்கில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கான அழைப்பிதழ் புது தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சோ்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஏப்ரல் மாதம் போதிய ஆதரவு எண்ணிக்கை இல்லாத காரணத்தால், தொகுதி மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மீண்டும் அந்த மசோதாவைவை கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் பூா்வாங்க பேச்சுவாா்த்தையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடா்பாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உள்ளரங்கில் ஏற்கெனவே இண்டி கூட்டணியைச் சோ்ந்த தமிழக எம்.பி.க்கள் (காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல்) ஆகியோா் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது, மசோதா தொடா்பான நகல் எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்டதும் அதுகுறித்து ஆராய்வதென தீா்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. மசோதாவின் நகல் கிடைக்காத நிலையில், அதன் மீது எவ்வாறு நிலைப்பாடு எடுப்பது என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்திருந்தாா்.
திமுக முடிவு என்ன?: காவிரி விவகாரத்தில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியபோது கட்சி வித்தியாசமின்றி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா். அதேபோன்று, காவிரி விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தமிழக முதல்வா் விஜய்க்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தலை முன்வைத்தாா்.
இந்தச் சூழ்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக முதல்வா் விஜய் கூட்டியுள்ள தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக உறுப்பினா்கள் கலந்து கொள்வது குறித்து அந்தக் கட்சி மேலிடம் என்ன முடிவெடுக்கப்போகிறது என்பது பெரிய எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
A consultative meeting of Members of Parliament has been organized under the leadership of Chief Minister C. Joseph Vijay regarding the constituency delimitation exercise proposed by the Central Government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.