செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
செப். 1 முதல் கோயில்களுக்குள் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...
முதல் நிலை கோயில்களுக்குள், வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செல்போன்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள், கோயிலுக்குள் வரும்போது விடியோ எடுப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் ரமேஷ்.
ஸ்ரீரங்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”ஸ்ரீரங்கம் கோயிலில் 21 கோபுரங்களில் ஒன்றான ஸ்ரீ தாமோதரகிருஷ்ண கோபுரம் பணிகள் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பல்வேறு சூழல் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டு, தற்போது நம்முடைய ஆட்சியில் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருக்கோயில் நிலம் தொடர்பான பிரச்னைகள் அனைத்தும் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அல்லது அந்த அறக்கட்டளை நிர்வகிக்கக்கூடிய நபர்களுடைய பெயர்களில் இருக்கக்கூடிய இடங்கள், கோயில்களுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக அந்த நிலங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்ட நிலையில், சில காரணங்களை மறைத்து, நீதிமன்ற வழக்குகள் மூலமாக, நிர்வாக ரீதியான சில விஷயங்கள் மூலமாக அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் பத்திரப்பதிவுகள் நடக்கிறது.
அறநிலைத்துறை கவனத்திற்கு வந்த உடனே, சட்டரீதியாக மற்றும் காவல் துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோயில் சொத்துக்களாக இருந்தாலும், கோயிலுக்கு தர்ம காரியங்கள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட அறக்கட்டளை சொத்துக்களாக இருந்தாலும் அது காப்பாற்றப்படும், இந்து சமய அறநிலையத்துறை கைவிடாது.
திருக்கோயில்களில் செல்போன்கள் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ளது, சமூக வலைதளங்களில் பல விடியோக்கள் வருவதைப் பார்க்கிறோம். கடந்தகால ஆட்சியில் அதனை செயல்படுத்தவில்லை, இதனால் கோயில் கருவறை விடியோகூட வெளிவருகிறது, முதல் நிலை திருக்கோயில்களில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து செல்போன் கவுன்டர்கள் வைத்து பாதுகாப்பான முறையில் செல்போன்களை பாதுகாக்க கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அனைத்து முதல் நிலை கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கானத் தடைகள் அமலுக்கு வரும்.
மனநிறைவுக்காக, கோயிலுக்குள் சாமிகும்பிட செல்லும்போது செல்போன் பயன்படுத்துவது தேவையற்ற ஒன்று, செல்போன்களை பயன்படுத்துவது, புகைப்படம் எடுப்பது, விடியோ எடுப்பது தேவையற்ற ஒன்று, இறைவனை தரிசிக்க செல்லும்போது எண்ணங்கள் இறைவன் மேல் இருக்க வேண்டும், என்ன பிரார்த்தனைக்கு வந்தோமோ, அதன் மேல் கவனம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.
அதேநேரம் ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் மற்றும் அமைச்சர்கள் வரும்போது, கோயிலுக்கு வெளியே பேட்டி மற்றும் விடியோ எடுத்துக் கொள்ளலாம். கோயிலுக்குள் அவர்கள் தரிசனத்திற்கு செல்வதை விடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும்” என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார்.
Ramesh, the Minister for Hindu Religious and Charitable Endowments, has announced a ban on carrying mobile phones inside 'First Grade' temples, effective from September 1st.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.