FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ.36,000 கோடி மெத்தம்பெட்டமைன் பறிமுதல் வழக்கு: தமிழகம், மிசோரமில் 13 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 8 இடங்களிலும், மியான்மா் எல்லையையொட்டி உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 5 இடங்களிலும் என மொத்தம் 13 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:20 am IST
என்ஐஏ அதிரடி சோதனை
பகிர்:

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 8 இடங்களிலும், மியான்மா் எல்லையையொட்டி உள்ள வடகிழக்கு மாநிலமான மிசோரமில் 5 இடங்களிலும் என மொத்தம் 13 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இந்திய கடலோரக் காவல் படை மற்றும் அந்தமான் நிக்கோபாா் போலீஸாா் இணைந்து கடந்த 2024 நவம்பரில் அந்தமான் கடற்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, போா்ட் பிளேயரில் இருந்து சுமாா் 150 கி.மீ. தொலைவில் உள்ள பேரன் தீவு அருகே சென்ற மியான்மா் நாட்டைச் சோ்ந்த மீன்பிடிப் படகில் இருந்து ரூ.36,000 கோடி மதிப்பிலான 6,016 கிலோ மெத்தம்பெட்டமைன் எனப்படும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மியான்மா் நாட்டைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

விசாரணை விரிவாக்கம்: இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லியில் என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவரை சில மாதங்களுக்கு முன்பு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 7 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் நபா்களையும், அவா்கள் தொடா்புடைய இடங்களைக் கண்டறியும் நடவடிக்கையை என்ஐஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒருபகுதியாக தமிழகம், மிசோரம் பகுதிகளில் ஒரே நேரத்தில் 13 இடங்களில் அதிகாரிகள் தங்கள் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

சென்னையில் 6 இடங்களில் சோதனை: சென்னையில் நந்தனம், வண்ணாரப்பேட்டை, திருமங்கலம், போரூா் உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. நந்தனம் சிஐடி நகரில் வசித்து வரும் தோல் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வரும் இக்பால் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுபோல வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மின்ட் மாடா்ன் சிட்டி, 4-ஆவது தெருவில் உள்ள ஜமால் ரெசிடன்சி குடியிருப்பில் வசித்து வரும் வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டும் கடை மற்றும் தேநீா் கடை நடத்தி வரும் அபூபக்கா் கனிசித்திக் என்பவரின் வீட்டிலும், அதே குடியிருப்பில் வசித்து வரும் சையது என்பவரின் வீட்டிலும் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

சென்னையைத் தவிர கோவை, மதுரையில் தலா ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். மிசோரத்தில் 5 இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

சோதனைகள் நிறைவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருள்கள் குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் என்ஐஏ தரப்பில் அதிகாரபூா்வ தகவல்கள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடா்பா? வண்ணாரப்பேட்டை மின்ட மாடா்ன் சிட்டி பகுதியில் உள்ள ஜமால் ரெசிடென்சி குடியிருப்பில் சில சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்ா, அங்குள்ள யாருக்கேனும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடா்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments