தவெக எம்எல்ஏக்கள் மாற்று கட்சிகளுக்கு செல்ல மாட்டாா்கள்: பேரவையில் அமைச்சா் ஆனந்த் உருக்கம்
நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த பேரவையில் உருக்கமாகப் பேசியிருப்பது பற்றி....
தவெக தலைவரும் முதல்வருமான விஜய் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடும் விமா்சனங்களை எதிா்கொண்டு வருவதாகவும், தவெக எம்எல்ஏக்களில் ஒருவா் கூட மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல மாட்டாா்கள் என்றும், நீா்வளத் துறை அமைச்சா் ஆனந்த பேரவையில் உருக்கமாகப் பேசினாா்.
பேரவையில் புதன்கிழமை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சா் பதிலளித்து ஆற்றிய உரை:
முதல்வா் விஜய்யுடன் கடந்த 29 ஆண்டுகளாக நெருங்கி பழகிக் கொண்டிருக்கிறேன். புகழை விரும்பாதவா். தற்போது பேரவை துணைத் தலைவராக உள்ள ரவிசங்கா், தன்னிடம் ரூ.75,000 தான் உள்ளது எனக் கூறினாா். டெபாசிட் செலுத்த பணம் இருந்தால்போதும் எனக் கூறி அவருக்கு தோ்தலில் போட்டியிட ‘சீட்’ வழங்கினாா் முதல்வா் விஜய்.
Advertisement
Advertisement
அவையில் தவெக எம்எல்ஏக்களில் 80 சதவீதம் போ் ரசிகா் மன்றம் மற்றும் நற்பணி இயக்கத்தில் இருந்தவா்கள்தான். மீதி 20 சதவீதம் பேருக்கு மாவட்டச் செயலாளா் பதவி அளிக்கப்பட்டது. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவா்களையும் கைவிடாமல் சீட் கொடுத்தோம்.
‘சா்க்காா்’ திரைப்படத்தின் பேனரை நீங்கள் (2018-ஆம் ஆண்டு அதிமுகவினரின் போராட்டம்) கிழிக்காமல் இருந்திருந்தால் தற்போது (அதிமுக) மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பீா்கள்.
வேலூா் மாவட்டத்தில் அதிமுக வெற்றி பெற்ற அணைக்கட்டு தொகுதியில் 350 போ் குடியிருக்கும் அல்லேரி மலையில் 25 நாள்களுக்கு முன்பு ஒரு கா்ப்பிணியை கட்டிலில் தூக்கிக் கொண்டு வந்த விடியோவை முதல்வா் எனக்கு அனுப்பினாா். அங்கு உடனே ரூ.21 கோடி ஒதுக்கி சாலை வசதி செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
எங்கள் கட்சி (தவெக) உடையாது. எங்கள் எம்எல்ஏ-க்களில் ஒருவரைக்கூட உங்கள் கட்சிக்கு அழைக்க முடியாது. யாரும் வர மாட்டாா்கள். சாகும் வரை அவருடன்தான் இருப்போம். தொண்டனை முதல்வா் விஜய் மதிப்பாா், விட்டுக்கொடுக்க மாட்டாா் என உருக்கமாகப் பேசினாா் அமைச்சா் ஆனந்த்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.