தவறான சிகிச்சையில் நோயாளி உயிரிழந்ததாக புகார்: உறவினர்கள், கிராம மக்கள் மறியல் போராட்டம்
சிதம்பரத்தில் தவறான சிகிச்சையில் நோயாளி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள், கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறித்து...
சிதம்பரம்: சிதம்பரத்தில் உடல்நலக் குறைவுடன் கீழசன்னதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அளக்குடி மானியம் தெருவை சேர்ந்த கோபி (51), தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து வியாழக்கிழமை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டம் அளக்குடி கிராமம் மானியம் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மகன் கோபி (51), முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக ஆக.19 ஆம் தேதி காலை 8 மணியளவில் சிதம்பரம் கீழ சன்னதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் மதியம் 2 மணியளவில் அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து இரவு 9.30 மணியளவில் அறைக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில், இரவு 9.40 மணியளவில் வலி அதிகமாக இருப்பதாக கோபி சத்தம் போட்டுள்ளார். அப்போது மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். மூச்சு அடைக்கிறது என்றும் கோபி சொல்லியிருக்கிறார். பிறகு சத்தம் போட்டு கத்தவே மருத்துவர் இரவு 12.10 மணிக்கு வந்து சிபிஆர் சிகிச்சை கொடுத்துள்ளார். இரவு 12:30 மணியளவில் கோபிக்கு மூச்சுப் பேச்சு இல்லை என்பதால் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் கோபி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
உயிரிழந்த கோபி உடல் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தவறான மருத்துவச் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயிரிழந்த கோபியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தனியார் மருத்துவமனை அமைந்துள்ள கீழ சன்னதி பகுதியில் வியாழக்கிழமை காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சிதம்பர நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறு வலியுறுத்தியதை அடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Allegation of patient's death due to medical negligence: Relatives and villagers stage a road blockade
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.