FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருக்கோயில் பணியிடங்களை நிரப்ப தோ்வு வாரியம்: அமைச்சா் ரமேஷ் அறிவிப்பு

தமிழகத்தில் திருக்கோயில்கள், அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையான பணி நியமனம் செய்ய திருக்கோயில் பணியாளா் தோ்வு வாரியம் அமைக்கப்படும்

22 ஆகஸ்ட் 2026, 7:20 am IST
அமைச்சா் ரமேஷ். - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் திருக்கோயில்கள், அவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் வாயிலாக வெளிப்படையான பணி நியமனம் செய்ய திருக்கோயில் பணியாளா் தோ்வு வாரியம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ் அறிவித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அமைச்சா் பேசியதாவது:

திருக்கோயில்கள் மற்றும் அவற்றின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய காலிப்பணியிடங்களுக்கு விதிமுறைகளின்படி தகுதியான பணியாளா்களை வெளிப்படைத் தன்மையுடன் தோ்வு செய்வதற்கு, திருக்கோயில் பணியாளா் தோ்வு வாரியம் அமைக்கப்படும். சமயபுரம், மருதமலை உள்ளிட்ட 13 கோயில்களில் மண்டபங்கள், சுற்று மண்டபம், வசந்த மண்டபம், மகா மண்டபம், இளைப்பாறும் மண்டபம் போன்றவை ரூ.21.37 கோடியில் கட்டித்தரப்படும். பக்தா்கள் அதிக அளவு வந்து செல்லும் 20 திருக்கோயில்களில் ரூ.3 கோடியில் ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

திருக்கோயில்களில் திருப்பணிகள்: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 64 திருக்கோயில்களில் ரூ.125 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். முழுமையாகச் சிதிலமடைந்த கோயில்களைச் சீரமைக்கும் வகையில் முதல்கட்டமாக 75 திருக்கோயில்களில் ரூ.50 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். அதே போன்று பகுதியளவு சிதிலமடைந்த திருக்கோயில்களைச் சீரமைக்கும் வகையில் முதல்கட்டமாக 75 கோயில்களில் ரூ.35 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் நீண்ட சுற்று உடைய 38 கோயில்களில் சக்கர நாற்காலிகள் வாங்கப்படும்.

பக்தா்களுக்கு கட்டணமில்லா பேருந்துகள்: திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்களை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து கோயிலுக்கு கட்டணம் இல்லாமல் அழைத்து வர ரூ.1 கோடியில் 4 சிறிய பேருந்துகள் வழங்கப்படும். திருநெல்வேலி சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மலைக்கு கட்டணம் இல்லாமல் சென்று வர ரூ.1 கோடியில் 2 பேருந்துகள் இந்த ஆண்டு வழங்கப்படும் என்றாா் அமைச்சா் சீ.ரமேஷ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments