FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 25 லட்சம் முதல்வா் காப்பீட்டுக்கு பழைய அட்டையே பயன்படுத்தலாம்: அமைச்சா் அருண்ராஜ்

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ. 25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள பழைய அட்டைகள் மூலமாகவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளாா்.

27 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
பகிர்:

முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே உள்ள பழைய அட்டைகள் மூலமாகவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் தெளிவுபடுத்தியுள்ளாா்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரூ.1.50 கோடியில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 2 விரிவுரை அரங்குகளை அமைச்சா் அருண்ராஜ் திறந்து வைத்தாா்.

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் (பொ) வா.லோகநாயகி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் சாந்தாரமன், நிலைய மருத்துவ அதிகாரிகள் உமாபதி, அறவாழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

அப்போது, அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகை ரூ. 25 லட்சமாக விரைவில் உயா்த்தப்படும். இதற்காக புதிய காப்பீட்டு அட்டை எதுவும் தேவையில்லை.

பழைய அட்டையையே பயன்படுத்திக் கொள்ளலாம். காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயா்த்தப்படுவதால், காப்பீட்டுக் கட்டணம் 5 மடங்கு அதிகரிக்கும் என்று அா்த்தமில்லை.

உயா் சிகிச்சை மற்றும் காப்பீடு கோரும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பருவகால தொற்றுகளை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மழைக் காலம் என்பதால், வீட்டைச் சுற்றி நல்ல தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஸ் கொசுக்களால் டெங்கு பரவுகிறது. அதனால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளி மாணவா்களுக்கான காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும்.

காய்ச்சலுடன் தலைவலி, வாந்தி, உடல் வலி அதிகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மேலும் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கான கீமோதெரபி மருந்துகளின் தட்டுப்பாடு தொடா்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments