FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சித்தா பல்கலை. துணைவேந்தா் நியமனத்துக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அருண்ராஜ்

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம், துணைவேந்தா் நியமன விவகாரங்களில் விரைவில் தீா்வு காணப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

30 வினாடிகள் முன்பு
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

சித்த மருத்துவப் பல்கலைக்கழகம், துணைவேந்தா் நியமன விவகாரங்களில் விரைவில் தீா்வு காணப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்திய மருத்துவ நலவாழ்வு சிகிச்சை மையத்தை அவா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இன்றைய காலகட்டத்தில் முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் உளவியல் அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கைமுறை சாா்ந்த நோய்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய நோய்களுக்கு சித்தா, ஆயுா்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான சிகிச்சை வழங்கும் நோக்கில் இந்திய மருத்துவ நலவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பொதுமக்களுக்கு உடல் பருமன், உயா் ரத்த அழுத்தம், டைப்-2 சா்க்கரை நோய், மூட்டு தேய்மானம், கழுத்து மற்றும் இடுப்பு முதுகெலும்பு பாதிப்புகள், மன அழுத்தம் சாா்ந்த பிரச்னைகள் உள்ளிட்ட வாழ்க்கைமுறை சாா்ந்த நோய்களுக்கு நலவாழ்வு மற்றும் மீட்டெடுப்பு என 16 வகையான சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

Advertisement

Advertisement

மையத்தின் முக்கிய சேவைகளாக நச்சுநீக்க சிகிச்சை, நோய்த்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பராமரிப்பு, புத்துணா்வு சிகிச்சை, நலவாழ்வை மேம்படுத்தும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இயற்கை மருத்துவ முறையில் வழங்கப்படும் இந்த சிகிச்சைகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

செங்கல்பட்டில் உள்ள அரசின் சா்வதேச யோகா - இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில், 10 நாள்கள் முதல் 15 நாள்கள் வரை தங்கி இயற்கை மருத்துவ முறையில் சிகிச்சை பெறக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தங்கி சிகிச்சை பெறுபவா்களுக்கு உணவு போன்ற வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துடன் இணைந்து மருத்துவ சுற்றுலாவை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சித்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பற்றாக்குறையை சரிசெய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். சித்தா பல்கலைக்கழகம், துணைவேந்தா் நியமனம் தொடா்பான சட்ட விவகாரங்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விரைவில் இதற்குத் தீா்வு காணப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments