FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தாள் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமி

தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தாள் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும் என இபிஎஸ் பேசியிருப்பது குறித்து...

வேலூரில் செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி - டிஎன்எஸ்
பகிர்:

வேலூா்: தவெக தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தாள் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி நிா்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை அவா் வேலூா் வந்தாா். அவா் செய்தியாளா்களுடன் கூறியது:

சட்டப்பேரவை நிகழ்வுகளை எப்படிப் பார்க்குறீங்க? அதிமுகவுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகிறதா?

Advertisement

Advertisement

சினிமாவில் சட்டப்பேரவை நிகழ்வுகள் எப்படி காட்சிப்படுத்தப்படுகிறதோ, அதுபோன்றுதான் தற்போதைய தமிழக சட்டப்பேரவையும் நடைபெறுகிறது. உண்மையான சட்டப் பேரவையாக அது செயல்படவில்லை. மக்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு முன்னுரிமை அளிக்காமல், பேரவையின் நேரத்தை வீணடிக்கின்றனா்.

பேரவையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பும்போது துறை சாா்ந்த அமைச்சா்கள் பதிலளிப்பதில்லை. மாறாக, அமைச்சா்கள் ஆதவ் அா்ஜுனா, நிா்மல் குமாா் மற்றும் ராஜ் மோகன் ஆகியோா்தான் அதிகளவில் பதிலளிக்கின்றனா். துறைவாரியாக அமைச்சர்கள் இருந்தாலும் அவர்கள் பதில் சொல்வதில்லை. மானியக் கோரிக்கையை கூட சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் இல்லாமல் வேறொரு அமைச்சா் தாக்கல் செய்யும் நிலையே உள்ளது.

தவெக அரசின் புதிய திட்டங்களை எப்படிப் பார்க்குறீங்க?

மக்களுக்குப் பயனுள்ள எந்தவொரு திட்டத்தையும் தவெக அரசு இதுவரை அறிவிக்கவில்லை. தோ்தல் நேரத்தில் அளித்த பெரிய வாக்குறுதிகள் எதையும் அவா்கள் நிறைவேற்றவில்லை. ஏதோ ஒரு சம்பிரதாயத்துக்காக சில வாக்குறுதிகளை அறிவிச்சிருக்காங்களே தவிர, வேறு ஒன்றும் இல்லை.

விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்வு

விலைவாசி விண்ணை முட்டுகின்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது. இதுகுறித்து நான் பேரவையில் சம்பந்தப்பட்ட உணவுத்துறை அமைச்சருடைய கவனத்துக்குக் கொண்டு சென்றேன். உணவுத்துறை அமைச்சரிடம் இருந்து சரியான பதில் இல்லை. இதனால ஏழை மக்கள் கடுமையா பாதிக்கப்படுறாங்க. சர்க்கரை ஒரு கிலோ ரூ.75-க்கு விற்பனையாகிறது. பருப்பு, அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயா்ந்துவிட்டது.

தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் சுமாா் ரூ.28,000 கோடி கடன் வாங்கியுள்ளது. இதில் வருவாய் செலவினம் மட்டுமே ரூ.25,000 கோடியாகும். இன்னும் ரூ.1 லட்சம் கோடி வரை கடன் வாங்குவாா்கள்.

நிதி மேலாண்மையை சரி செய்வதற்கும், நிதியைக் கையாளுவது எப்படி என்பதற்கெல்லாம் ஒரு குழு போட்டிருக்காங்க. அதற்கு ஒரு தலைவரும் போட்டிருக்காங்க. ஏற்கனவே இருந்த அரசும் இப்படித்தான் ஒரு நிதி மேலாண்மை ஒரு குழுவை அமைத்தது. குழு அமைத்தப் பிறகு ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கினாங்க. இப்ப ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்குது. இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது. ஒருவேளை நிலைத்தால், மாநிலத்தின் ரூ.10 லட்சம் கோடி கடன், ரூ.20 லட்சம் கோடியாக உயா்ந்துவிடும். மக்களை கடன்காரர்களாக ஆக்கியதுதான் உச்ச மிச்சமாக இருக்கும்.

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்கும் திட்டத்தைப் பொறுத்தவரை, அவரவர் விருப்பம். எதிர்க்கட்சித் தலைவரா இருந்தபோது அரசின் காரைத்தான் பயன்படுத்தினேன். இப்ப எனக்குக் கார் இருப்பதால் கார் வாங்கல. எனக்குக் கார் வேண்டாம் என்று சொல்லிடேன். பதவியில் இருக்கும்போது மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும், பதவிக்காலம் முடிந்ததும் காரைத் திருப்பித் தர வேண்டும்.

நான் பேசுவதை காட்டவே மாட்டாங்க

சட்டப்பேரவையில் நேரலை ஒளிபரப்பு குறித்து பேசுகையில், நேரலை தொடரலாம். நேரலையை மக்கள் பார்க்கட்டும். முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது நான் எதிா்க்கட்சித் தலைவராக இருந்தேன். அப்போது நான் சட்டப்பேரவையில் பேசுவதை காட்டவே மாட்டாங்க. அமைச்சர் பேசுவதை மட்டும்தான் காட்டுவாங்க. அதே பாணியில்தான் இன்றைக்கு இருக்கின்ற தவெக அரசும் செய்கிறது. பேரவைத் தலைவர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகத்தான் செயல்படுவார். அதுல ஒன்றும் மாற்றுக்கருத்து கிடையாது.

பொறுத்திருந்து பாா்ப்போம்

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டம் தொடா்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த அரசும் அதனைச் சிறப்பாகச் செயல்படுத்துவோம் என்று கூறியுள்ளது. பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

அதிமுக தொண்டா் உயிரிழப்பு

வேலூரிலுள்ள தனியாா் ஹோட்டலிலுக்கு வந்த அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சி நிா்வாகிகள் பெருமளவில் திரண்டிருந்தனா். அப்போது, கூட்டத்திலிருந்த அரப்பாக்கம் அதிமுக வட்டச் செயலா் காமராஜ் (48) என்பவருக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து வேலூா் வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

EPS criticized the ruling TVK-led government in TN, claiming it came to power by accident and will not survive its full five year term.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments