FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது! - அன்புமணி வலியுறுத்தல்

மேக்கேதாட்டுவில் அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியிருப்பது குறித்து....

அன்புமணி ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு அவசரம் காட்டும் நிலையில், தமிழக அரசு அலட்சியமாக இருந்து காவிரி உரிமையை இழக்கக் கூடாது என்றும் இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கண்டிக்கத்தக்கது

Advertisement

Advertisement

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும், மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான அனுமதி கோரி மத்திய அரசை கர்நாடக அரசு விரைவில் அணுக இருப்பதாகவும், கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழக மக்கள் மத்தியிலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அணையை கட்ட கர்நாடக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

மேக்கேதாட்டு அணையும் உதவும்

கர்நாடக மாநிலம் மைசூர் நகரில் நேற்று நடைபெற்ற சுத்தூர் மடத்தின் மறைந்த ஆதீனம் ஸ்ரீ ராஜேந்திர சுவாமிகளின் 111 ஆம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் டி.கே.சிவக்குமார், "கர்நாடக மாநில விவசாயிகளின் நலனுக்கு கிருஷ்ணராஜசாகர் அணை எந்த அளவுக்கு உதவியதோ, அதேபோல் மேக்கேதாட்டு அணையும் உதவும். மேக்கேதாட்டு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கர்நாடகத்திற்கு சாதகமாக இருப்பதால், அதன்படி அணை கட்ட அனுமதி அளிக்கும்படி மத்திய அரசை கர்நாடக அரசு கோர உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன

கர்நாடக முதல்வரினன் கூற்றுப்படி இரு விஷயங்கள் அம்பலமாகியுள்ளன. முதலாவது மேக்கேதாட்டு கர்நாடக உழவர்களை மேலும் வலிமைப்படுத்த உதவும் என்று அவர் கூறியிருப்பதன் மூலம், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடக அரசு, விவசாயத்திற்குப் பயன்படுத்த உள்ளது என்பது தெளிவாகிறது. மேக்கேதாட்டு அணையில் தேக்கி வைக்கப்படும் நீரில் இருந்து குடிநீர் தேவைக்கு தவிர, பாசனத்திற்காக ஒரு வாளி நீரைக்கூட கார்நாடகம் எடுக்காது என்று இதுவரை கர்நாடக அரசு கூறி வந்த நிலைப்பாட்டுக்கு இது முற்றிலும் மாறாக உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், அதில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகம் பயன்படுத்தும்; அதனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காது என்று பாமக கூறிவந்த குற்றச்சாட்டை கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாடு உறுதி செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்

மேலும் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் மேக்கேதாட்டு அணையை கட்டப்போவதாக கூறிவந்த கர்நாடக அரசு, இப்போது அதன் நீரை பாசனத்திற்கும் பயன்படுத்தப்போவதாக கூறியிருப்பது மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்கு எதிரானது. இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு போதுமானது. இதை மத்திய அரசின் கவனத்திற்கும், உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கும் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும்.

ஆபத்து அதிகம்

மேக்கேதாட்டு அணையின் நீர்த்தேக்கப்பகுதி எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்பதும் கர்நாடக முதல்வரின் உரை மூலம் தெரியவந்துள்ளது. மேக்கேதாட்டு அணையின் நீர்த்தேக்கப்பகுதி 5000 ஹெக்டேர், அதாவது 12,500 ஏக்கராக இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதி 5,400 ஹெக்டேர், அதாவது 13,500 ஏக்கராக இருக்கும் என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். இதன் மூலம் விரிவான திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ள 67 டிஎம்சியை விட அதிக நீரை மேக்கேதாட்டு அணையில் தேக்கி வைக்க முடியும். அதுமட்டுமின்றி மேக்கேதாட்டு அணை கட்டுவதால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் ஆபத்து மிகவும் அதிகமாக இருக்கும். இதை அனுமதிக்கக் கூடாது.

பொய்யான பிரசாரம்

கர்நாடகத்தின் முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்ற நாளில் இருந்தே மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கலாம் என்று தான் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறதே தவிர, மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி அளிக்கவில்லை. ஆனால், மேக்கேதாட்டு அணையை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து பொய்யான பிரசாரம் செய்து வருகிறார். இதை மறுத்து, உண்மை நிலையை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டிய தமிழக அரசோ, எதையும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது.

நேபாளத்தில் இமயமலையில் உருவாகியிருந்த ஏரிகள் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல், இயற்கை சீற்றங்களால் எதிர்காலத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன்கீழ் பகுதியில் உள்ள தமிழக பகுதிகள் பேரழிவை சந்திக்கும் ஆபத்தும் உள்ளது.

தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக, காவிரி பாசன மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நினைத்துப்பார்க்க முடியாதவை. மேக்கேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாடு அமைதியாக இருப்பது நல்லதல்ல. தமிழக அரசின் அலட்சியம் காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை தாரைவார்ப்பதாக அமைந்துவிடும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும்

மேக்கேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

The Tamil Nadu government must no longer remain indifferent on this issue. It must intensify measures to protect Tamil Nadu's rights in the Mekedatu matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments