தமிழகத்தில் தவெகவால் மட்டுமே மதுவிலக்கு அமலுக்கு வரும்: பேரவை துணைத் தலைவர்
தமிழகத்தில் தவெக அரசால் மட்டுமே மதுவிலக்கைக் கொண்டுவர முடியும் என பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் கூறியது குறித்து...
தமிழகத்தில் தவெக அரசால் மட்டுமே மதுவிலக்கைக் கொண்டுவர முடியும் என பேரவைத் துணைத் தலைவர் ரவிசங்கர் கூறினார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து சௌமியா அன்புமணி எம்எல்ஏ பேசியதாவது, "பெண்களிடம் இருந்த சுதந்திரத்தைப் பறித்தது இந்த டாஸ்மாக்தான். 2025 தீபாவளியில் ரூ. 789.95 கோடிக்கும், 2026 பொங்கல் திருநாளில் ரூ. 725.56 கோடிக்கு பொதுமக்கள் மது அருந்தியுள்ளனர்.
இந்தப் பணமெல்லாம் எங்கிருந்து வருகிறது? இவையெல்லாம் பெண்களிடம் இருக்க வேண்டிய பணம். ஆனால், அவற்றை கோடிக்கணக்கில் மது அருந்தினால், பெண்களுக்கான சுதந்திரம் எப்படி கிடைக்கும்?
Advertisement
Advertisement
குழந்தைகளின் கல்விக் கட்டணம், மகள்களின் திருமணச் செலவு, வீடு கட்டுவதற்காகவும் வைத்திருக்கக் கூடிய குடும்பத்தின் பணமெல்லாம், டாஸ்மாக் சென்று விடுகிறது. பெரும்பாலான கிராமங்களில் பெண்களின் கழுத்தில் மஞ்சள் கயிறுதான் போட்டிருப்பர்.
அரசியலமைப்பின்படி, மதுவை விற்பனை செய்ய மாநில அரசுக்கு உரிமை கிடையாது. மருந்துக்காக மட்டுமே மதுவை விற்பனை செய்ய உரிமையுண்டு.
மது அருந்துவதற்கான உரிமை மக்களுக்கும் கிடையாது, விற்பதற்கான உரிமை அரசுக்கும் கிடையாது என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு இருக்கிறது. அதையும் மீறித்தான் எல்லா அரசுகளும் மது விற்பனை செய்து வருகிறது.
இதை எதிர்ப்பதற்காகத்தான், உச்ச நீதிமன்றம் வரையில் பாமக சட்டப் போராட்டம் நடத்தி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 90,000 மதுக்கடைகளை மூடியது.
தவெக அரசின் முதல் நாளிலும் ஒரு கையெழுத்து மூலம் 717 மதுக்கடைகளை மூடியது மிகப்பெரிய சாதனைதான். ஒரு கையெழுத்திடுவதன் மூலம் பெண்களின் தலையெழுத்தையே மாற்ற முடியும்.
ஆகையால், மதுவிலக்கை ஒரு கொள்கையாகவாவது அரசு அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆக்கபூர்வமாக சௌமியா அன்புமணி பேசுவதைப் பாராட்டிப் பேசிய பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர், "மதுவிலக்கு தொடர்பாக கையெழுத்திட கடந்த கால அரசுகள் தயங்கின.
நாங்கள் (தவெக) 100 நாள்களைத்தான் கடந்திருக்கிறோம். மாற்று ஏற்பாடுகள் வந்தபின், தமிழகத்தில் மதுவிலக்கு என்ற ஒன்று வந்தால் - அது தவெகவால் மட்டும்தான் அமலுக்கு வரும்" என்று தெரிவித்தார்.
Only TVK can bring about the implementation of alcohol prohibition in Tamil Nadu, says Deputy Speaker of the Assembly Ravishankar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.