ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் நேர்காணல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட 2,000 -க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் செய்து வருகிறார்.
அவ்வாறு இன்று நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் பேசுகையில்,
"அதிமுக கூட்டணியில் ஒரு சில நாள்களில் புதிய கட்சி இணையவுள்ளது. அதிமுக கூட்டணி வலிமையாக உள்ளது. மேலும் சில கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நம்பிக்கையுடன் இருங்கள். அதிமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். தேர்தலில் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்று பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக(அன்புமணி) ஆகியோர் இணைந்துள்ள நிலையில் புதிதாக இணையவுள்ள கட்சி எது? என பரபரப்பு கிளம்பியுள்ளது.
தேமுதிக, பாமக(ராமதாஸ் தரப்பு), ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.