கூட்டணிக் கட்சியை இழிவுபடுத்தும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருப்பதாவது:
”மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் பேரியக்கத்தை அவமதிக்கும் வகையில் திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
மொழி, சமூக நீதி, ஜனநாயக உரிமைகளுக்காக உயிர்நீத்த தியாகிகளின் நினைவை போற்ற வேண்டிய மேடையில், கூட்டணிக் கட்சியை இழிவுபடுத்தும் வகையில் பேசிய கோ.தளபதியின் பேச்சு தேவையற்றதும், கண்டிக்கத்தக்கதுமானதும் ஆகும்.
காங்கிரஸ் பேரியக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் வலுவான அமைப்புடன் செயல்பட்டு வருகிறது. 100% பூத் கமிட்டி அமைக்கும் பணி நிறைவு பெறும் தறுவாயில் உள்ளது; 85% கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைப்பு சீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் கிராம சபை தொடர்பான பணிகள் மூலம், மக்களின் உரிமை, மரியாதை, வாழ்வாதாரம் குறித்த போராட்டத்தை காங்கிரஸ் பேரியக்கம் நேரடியாக மக்களிடையே கொண்டு சென்று வருகிறது.
கூட்டணி அரசியலின் மாண்பை மிதித்து, பொது மேடையில் காங்கிரஸ் பேரியக்கத்தையும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்திப் பேசிய திமுக மாநகர செயலாளர் கோ.தளபதி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வரை தமிழ்நாடு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.