FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி நீரைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் : எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூலை 2026, 1:07 am IST
உதயநிதி - கோப்புப் படம்
பகிர்:

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: கா்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்துவிட முடியாது; தண்ணீா் வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் யாரும் கேட்கவில்லை என்று கா்நாடக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளாா். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, பயிா்க் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய தமிழக முதல்வா், கா்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறாா்?

திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளும் சரியாக ஜூன் 12-இல் மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அந்தத் தீா்மானத்தை தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீா்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன். இதற்கெல்லாம் முதல்வா் பதில் ஏதும் கூறவில்லை. தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கா்நாடகம் தர மறுக்கிறது.

ஆளுங்கட்சியுடன் திடீா் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸின் ஆட்சி நடைபெறும் கா்நாடகத்திடம் இருந்து, தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை முதல்வா் கேட்டுப் பெற வேண்டும். எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments