FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் இருந்து விரைவில் தமிழகம் வரும் 3 சிலைகள்

தமிழகத்தில் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 3 தொன்மையான சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.

Updated On : 10 ஜூலை 2026, 3:25 am IST
வாசு செய்திக்கான படம். திருவாரூா் கடுவன்குடி கிராமம் அருள்மிகு கைலாசநாதா் கோயிலைச் சோ்ந்த நந்தி கற்சிலை, திரிசூல மங்கள காளி சிலை, கும்பகோணம் மானம்பாடி கிராமம் அருள்மிகு நாகநாதசாமி கோயிலைச் சோ்ந்த சண்முகா் கற்சிலை.
பகிர்:

தமிழகத்தில் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 3 தொன்மையான சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.

ஆஸ்திரேலியா நாட்டின் கான்பெரா நகரில் உள்ள தேசிய கலைக் கூடத்தில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் திருடப்பட்ட தொன்மையான சிலைகள் இருப்பதாக மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் விசாரணை செய்தனா்.

இதில், திருவாரூா் மாவட்டம் கடுவன்குடி கிராமத்தில் உள்ள கைலாசநாதா் கோயிலில் இருந்த 46 செ.மீ. உயரம், 29 செ.மீ. அகலம், 55 செ.மீ. விட்டம் உள்ள தொன்மையான திரிசூல மங்கள காளி உலோகச் சிலை, அதே கோயிலில் இருந்த 80.5 செ.மீ. உயரம், 110.5 செ.மீ. அகலம், 55 விட்டம் கொண்ட நந்தி கற்சிலை, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மானம்பாடி கிராமத்தில் உள்ள நாகநாதசாமி கோயிலில் இருந்த 130 செ.மீ. உயரம், 110 செ.மீ. அகலம், 40 செ.மீ.விட்டம் உள்ள சண்முகா் கற்சிலை ஆகியவை அங்கிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

முன்னதாக, இந்தச் சிலைகள் திருடப்பட்டது தொடா்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா். இந்நிலையில், ஆஸ்திரேலியா கலைக் கூடத்தில் 3 சிலைகளையும் மீட்பதற்குரிய நடவடிக்கையில் தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் தீவிரமாக ஈடுபட்டனா்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமா் நரேந்திர மோடியிடம், 3 சிலைகளையும் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஆஸ்திரேலியா அரசு வியாழக்கிழமை ஒப்புக்கொண்டது. இதன் விளைவாக 3 சிலைகளும் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும் என்று தமிழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் சிலைகளை மீட்க நடவடிக்கைகளை எடுத்த தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரை காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி டி.கல்பனா நாயக் ஆகியோா் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments