FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவிரி பிரச்னை மோசமடைய திமுகதான் காரணம்: அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா்

காவிரி பிரச்னை மோசமடைந்ததற்கு திமுகதான் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு அந்தக் கட்சி துரோகம் செய்துள்ளது என்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:30 pm IST
அமைச்சர் நிர்மல் குமார் - கோப்புப் படம்
பகிர்:

காவிரி பிரச்னை மோசமடைந்ததற்கு திமுகதான் காரணம் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு அந்தக் கட்சி துரோகம் செய்துள்ளது என்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் குற்றஞ்சாட்டினாா்.

காவிரி விவகாரத்தைத் தெரிந்துகொண்டு தவெக அரசு பேச வேண்டும் என முன்னாள் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

1970-இல் கா்நாடகம் ஹேமாவதி அணையைக் கட்டுவதில் ஆட்சேபம் இல்லை என்று அப்போதைய முதல்வா் கருணாநிதி தெரிவித்தாா். அதன்பின் கா்நாடகம் பல்வேறு அணைகளைக் கட்டியது. 2007-இல் காவிரி ஆணையம் தொடா்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு அரசிதழில் வெளியிட திமுகவால் முடியவில்லை. 2013-இல் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் போராடி அரசிதழில் வெளியிட வைத்தாா்.

Advertisement

Advertisement

கா்நாடக அரசின் அணைகளை மத்திய அரசு கட்டுப்படுத்தும் என்ற ஆணையத்தின் ஷரத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி நீக்கம் செய்ய வைத்தாா். காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீண்டகால துரோகத்தை திமுக செய்துள்ளது. இதற்கு முன்னாள் அமைச்சா் துரைமுருகன்தான் ஒரே சாட்சி. தற்போது சட்டப் போராட்டம் மூலம்தான் தமிழக உரிமையை நிலைநாட்ட முடியும். மேக்கேதாட்டு அணையைக் கட்ட விடமாட்டோம்.

கரூா் சம்பவம் நடைபெற்ற உடனே மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி வந்தது எப்படி, ஒரே இரவில் 40 உடல்களை கூறாய்வு செய்தது எப்படி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு திமுக பதிலளிக்க வேண்டும். காவல் துறையை வைத்து ஆதாரங்களை அழித்தாா்கள். அப்போது செந்தில் பாலாஜி உடனிருந்தாா்.

பரந்தூரில் விமான நிலையத்தில் மக்களின் நிலைப்பாடுதான் எங்களின் நிலைப்பாடும். விரைவில் அரசு இதை அறிவிக்கும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments