FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் கொண்டாட வேண்டும்: கவிஞர் வைரமுத்து

'தனக்கு வழங்கப்படவுள்ள ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் தன் வீட்டு விழாவாகக் கொண்டாட வேண்டும்' என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

Updated On : 13 ஜூலை 2026, 3:18 am IST
ஞானபீட விருது பெறும் கவிஞர் வைரமுத்துக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் அவரைக் கெüரவித்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சா. நாகமுத்து, தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலர் சத்யா அசோகன், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக சிறப்புநிலை தமிழாய்வுத் துறைத் தலைவர் பேராசிரியர் அறவேந்தன் மற்றும் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர்.
பகிர்:

'தனக்கு வழங்கப்படவுள்ள ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் தன் வீட்டு விழாவாகக் கொண்டாட வேண்டும்' என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டார்.

கவிஞர் வைரமுத்துக்கு 60-ஆவது'ஞானபீட விருது 2025' தில்லியில் திங்கள்கிழமை (ஜூலை 13) வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், அவருக்கு தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம். கற்பக விநாயகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

தில்லித் தமிழ்ச் சங்கத் தலைவர் ஜி.சிவபாலமுருகன் வரவேற்றுப் பேசினார். விழாவில் நீதிபதி எம். கற்பக விநாயகம் பேசுகையில்,'வைரமுத்துக்கு கலைமாமணி பட்டம் பெரிதல்ல, பத்மபூஷண் பட்டம்கூட பெரிதல்ல, தமிழ்ச் சங்கம் இவருக்கு பாராட்டு விழா நடத்துகிறது. அதுதான் பெருமை' என்றார்.

Advertisement

Advertisement

கவிஞர் வைரமுத்து தனது ஏற்புரையில் பேசியதாவது: எல்லா விருதுகளையும்விட நான் பெரிதும் நேசிக்கிற விருது- எல்லா சங்கீதங்களையும்விட என் காதுகள் அதிகம் நேசிக்கிற சங்கீதம் தமிழர்களின் கைதட்டல் என்பதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன். என்னைப் பாராட்டுகிற நீங்கள் உயர்ந்தவர்கள். சாகித்திய அகாதெமி விருது என்பது 22 மொழிகளுக்கு ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்புக்கு வழங்கப்படுகிறது. 22 படைப்பாளிகள் ஒரே மேடையில் இருப்பார்கள். பத்மஸ்ரீ விருதுக்கு 100 பேர் மேடையில் இருப்பார்கள். ஆனால், ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகிறது ஞானபீட விருது.

வைரமுத்து என்ற படைப்பாளியைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதுதான் ஞானபீடத்தினுடைய பெருமையாக நான் கருதுகிறேன். அதனால், இந்த ஞானபீட விருதை ஒவ்வொரு தமிழரும் தன் வீட்டு விழாவாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விருது வைரமுத்து என்ற தனிமனிதனுக்கு தரப்பட்டது அல்ல. என்னை ஊட்டி வளர்த்த தமிழ்ச் சொந்தங்களுக்கும் இந்த விருதில் பங்கு உள்ளது.

உலகத்தின் செவ்வியல் மொழிகளாக கிரேக்கம், லத்தீன், சீனம், சம்ஸ்கிருதம், தமிழ் என சொல்லப்பட்ட போதிலும்கூட இன்னும் இந்த மொழிகளில் அழியாமல் பேசப்படும் இரண்டு மொழிகள் சீன மொழியும் தமிழ் மொழியும்தான்.

ஒரு மொழி எத்தனை கோடி மக்களால் பேசப்படுகிறது என்பதை வைத்துத்தான் உலகம் ஒரு மொழிக்கு இடம் தருகிறது என்றால், தமிழா! நீ வீட்டில் தமிழில் பேச வேண்டும் என்று தோன்றுகிறதா? இல்லையா? உன் பிள்ளைகளோடு நீ தமிழ் பேச வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும். எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளுங்கள்; தாய் மொழியாகிய தமிழில் உரையாடுங்கள் என்றார் அவர்.

சங்கத்தின் இணைச் செயலர்கள் இரா. இராஜ்குமார் பாலா, ஜோதி பெருமாள் ஆகியோர் கவிதை வாசித்தனர். சங்கத்தின் பொதுச் செயலர் சத்யா அசோகன் பாராட்டுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சங்கத்தின் தலைவர் முனைவர் ஜி. சிவபாலமுருகன், துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், பொதுச் செயலர் சத்யா அசோகன், பொருளாளர் பாலமூர்த்தி, இணைப் பொருளாளர் பாலுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் ரேவதி ராஜன், வே. இளஞ்சோழன், பி.ஆர். தேவநாதன், பி. ராமமூர்த்தி, ஆர். கணேஷ், எம்.ஆர். ராஜேந்திரன் உள்ளிட்டோர் கவிஞர் வைரமுத்தையும், விருந்தினர்களையும் கெüரவித்தனர்.

தமிழ் இளைஞர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் செல்வராஜ் மகேந்திரன், செயலர் நடேசன் மற்றும் தில்லி தேவர் பேரவையின் ராமசந்திரன் தலைமையில் வைரமுத்துக்கு சிறப்புச் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments